ANI
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் சம்பவம் பேரதிர்ச்சியை அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

கிழக்கு நியூஸ்

ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் சம்பவம் பேரதிர்ச்சியை அளிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இக்கொலை தொடர்பாக 8 பேரைக் காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள தன்னுடைய வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடப்பதன் காரணமாக அயனாவரத்தில் தற்காலிகமாக வசித்து வந்தார். அவர், நாள்தோறும் பெரம்பூருக்கு வந்து கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு வந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டு வாசலில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, கிரீம்ஸ் சாலையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவருடைய உயிர் பிரிந்தது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அரசுப் பொது மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் பேட்டியளித்துள்ளார். சென்னையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என அறியப்படுகிறது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.