திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வாயிலுக்கு முன்பு ஒருவர் வெட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சங்கர் ஜிவால்.
திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம். கடந்த டிச.20 காலையில், இந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று துரத்திச் சென்று, நீதிமன்ற வாயிலில் வைத்து வெட்டிக் கொன்றது. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் காரில் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நீதிமன்றத்திலேயே பாதுகாப்பு இல்லை என அங்கிருந்த பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் குற்றம் சாட்டினர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மாநகர காவல் துணை ஆணையர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார்.
நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த படுகொலை தொடர்பாக நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், சி. குமரப்பன் ஆகியோரைக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தாமாக முன்வந்து அன்றே விசாரணை நடத்தியது. மாவட்ட நீதிமன்றங்களில் வழங்கப்படும் காவல்துறை பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து, பிறகு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் நேற்று (டிச.21) விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், நிரந்தரமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வரை இடைக்காலமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் தேவையான ஆயுதம் தாங்கிய காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், அனைத்து மாவட்ட நீதிமன்ற வளாகங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சங்கர் ஜிவால். குறிப்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் பிஸ்டல், லாங் ரேஞ்ச் துப்பாக்கிகளை பயன்படுத்தவேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.