தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுக்கு மதுரையில் நாளை (ஜன.26) பாராட்டு விழா!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

ராம் அப்பண்ணசாமி

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வகையிலான நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நாளை (ஜன.26) மதுரை அரிட்டாப்பட்டியில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்​பட்டி, செட்​டி​யார்​பட்டி, அ. வல்​லா​ளப்​பட்டி, சண்முகநாத​புரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்​கலம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலத்தில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான ஏலத்தை ரத்து செய்வதாக அண்மையில் மத்திய சுரங்க அமைச்சகம் அறிவித்தது.

இதனை அடுத்து, மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாய சங்கத்தினரும், முக்கியஸ்தர்களும் இன்று (ஜன.25) காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர்.

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வகையில் துரிதமாக நடவடிக்கை எடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். இதனை அடுத்து, நாளை (ஜன.26) அப்பகுதியில் நடக்கவிருக்கும் பாராட்டு விழாவிற்கு நேரில் வருமாறு முதல்வருக்கு அழைப்பு விடுத்தனர்.

அவர்களின் அழைப்பு ஏற்றுகொண்டு மதுரை வருவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவாதம் அளித்தார். நாளை காலை சென்னையில் நடக்கும் குடியரசு தினவிழாவில் பங்கேற்றுவிட்டு, தனி விமானம் மூலம் மதுரைக்குச் சென்று பாராட்டு விழாவில் கலந்துகொண்டு, அப்பகுதி விவசாயிகளை அவர் சந்திக்கிறார்.