தமிழ்நாடு

பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறாமல் ஒருங்கிணைக்க வேண்டும்: திருமாவளவன்

தலித் வாக்குகள் இண்டியா கூட்டணிக்குச் செல்லாமல் சிதறடிக்கும் விதமாக பகுஜன் சமாஜ் கட்சியும், பிரகாஷ் அம்பேத்கரின் விபிஏ கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தின.

ராம் அப்பண்ணசாமி

மஹாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.

மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று (நவ.23) வெளியாகின.மஹாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் 230-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பாஜக தலைமையிலான ஆளும் மஹாயுதி கூட்டணி. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளைக் கொண்ட மகா விகாஸ் அகாதி கூட்டணி 50-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

இந்நிலையில் மஹாரஷ்டிர தேர்தல் முடிவுகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,

`மஹாராஷ்டிர மாநிலத்தில் தலித் வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. தலித் வாக்குகள் இண்டியா கூட்டணிக்குச் செல்லாமல் சிதறடிக்கும் விதமாக அனைத்துத் தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சியும், பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான விபிஏ கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தின.

பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டையும் எதிர்ப்பதாக அவர்கள் கூறினாலும் "பாஜகவுக்கு ஆதரவாக தலித் வாக்குகளை பிரிப்பதற்கு அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தினர்" என்னும் விமர்சனம் பரவலாக உள்ளது. அறிந்தோ அறியாமலோ பாஜகவுக்குத் துணைபோகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றியை அது பெற்றுள்ளது என உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் கூறியிருப்பது மறுக்க முடியாத உண்மை. நான்தேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அந்த தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் பாஜக வென்றுள்ளது.

இதனால் முறைகேடான விதத்தில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கிறது. இதைப் பற்றித் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். இம்முடிவு பாஜகவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறவிடாமல், குறிப்பாக, தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்துகிறது’ என்றார்.