மத்திய நிதியமைச்சரால் கோவை அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் அவமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டிருக்கிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இது தொடர்பாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:
`கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், எளிமையான ஜிஎஸ்டி வரி முறைக்காக நம் பொது ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தபோது, அவரது கோரிக்கை ஆணவத்துடனும், அவமரியாதையுடன் அணுகப்பட்டுள்ளது.
கோடீஸ்வர நண்பர்கள் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற, தேசத்தின் சொத்துகளைப் பெற முற்பட்டால், மோடி சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்.
பண மதிப்பிழப்பு, தொடர்புகொள்ள முடியாத வங்கி அமைப்பு, பேரழிவு விளைவிக்கும் ஜிஎஸ்டி போன்றவற்றால் நம் சிறு வணிக உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கடைசியாக அவர்களுக்கு அவமரியாதையும் கிடைத்துள்ளது.
அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, அவர்களால் அவமானமானத்தை மட்டுமே பதிலாக அளிக்க முடிகிறது.
குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல வருடங்களாக நிவாரணத்தைக் கேட்கின்றனர். இந்தத் திமிர் பிடித்த அரசாங்கம் மக்களின் பேச்சைக் கேட்டால் ஒரே வரி விகிதத்துடன் எளிமைபடுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் மட்டுமே லட்சக்கணக்கான தொழில்களின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளும்' என்றார்.