சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுடன் அதிமுக இணைந்து களம் காண்கிறது. இதனால் ஏற்கெனவே அக்கூட்டணியில் இருந்த அமமுக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு உள்ளிட்டோர் விலகினார்கள்.
குறிப்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை தான் இணையப் போவது இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அமமுக ஏற்றுக் கொள்ளாது என்றும் குறிப்பிட்டார். இதனால் அக்கூட்டணி இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று (செப். 21) சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் அவரை, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். அங்கு, டிடிவி தினகரனும் அண்ணாமலையும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்த நிலையில், டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவைச் சந்திக்க நயினார் நாகேந்திரன் தில்லி பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.