தமிழ்நாடு

டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசியது என்ன?: அண்ணாமலை விளக்கம்| Annamalai |

முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்த விஜய்யின் விமர்சனத்தை வரவேற்கிறேன் என்றும் பேச்சு...

கிழக்கு நியூஸ்

திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றிணைய வேண்டும் என்பதை டிடிவி தினகரனிடம் வலியுறுத்தினேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் நேற்று (செப்.22) பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :-

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் வெளியேறுவதாகச் சொன்னபோது சென்னைக்கு வெளியில் இருந்தார்கள். அதனால் அவர்களுடன் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தேன். சென்னை வந்ததும் சந்தித்தேன். டிடிவி தினகரனைச் சந்தித்தது உண்மைதான். சந்திக்கப் போவதாக ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். நான் எப்போதும் சொல்லும் அதே கருத்தைத்தான் அவரிடமும் வலியுறுத்தினேன். தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைய அரசியல் களம் எப்படி இருக்கிறது, அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது? அதேபோல, அவருடைய பார்வை எப்படி இருக்கிறது? திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் என்ன நடக்க வேண்டும் என்பதைப் பற்றி இருவரும் பேசினோம். இது ஒரு வெளிப்படையான சந்திப்புதான்.

எப்போதும் டிடிவி தினகரனும் நானும் நட்புணர்வைப் பேணி வருகிறோம். அதனால், எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த நவம்பரில் முடிவு எடுக்கிறேன் என்று தினகரன் சொல்லியிருக்கிறார். நிச்சயமாக திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே இதைச் செய்யும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதை டிடிவி தினகரனிடம்வலியுறுத்தியிருக்கிறேன். மறுபடியும் நீங்கள் மறுபரிசீலனை செய்யுங்கள், யோசியுங்கள் என்று கூறியிருக்கிறேன். அதன் பிறகு அவருடைய முடிவுக்கு நம் காலம் இருக்கிறது, காத்திருப்போம்.

சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் எல்லாமே அரசியலில் கடைசியாக தேர்தல் களத்தின் சூடு வரும்போது மாறும் என்பது என் நம்பிக்கை. அதே நேரத்தில், நான் எப்போதுமே டிடிவி தினகரனாக இருந்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் எல்லா தலைவர்களையும் மதிக்கக்கூடியவன் நான். 2024இல் நம்மை நம்பி வந்தவர்கள், அதனால் பொது வெளியில் சில வார்த்தைகள் அவர்களைக் காயப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது என்பதையும் நான் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். அரசியலில் நிரந்தர எதிரிகளோ நண்பர்களோ இல்லை.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று டிடிவி தினகரன் தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். நாம் அவரிடம் மாற்று ஒரு கருத்தை வைப்பது தவறில்லை. ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அவருடைய இஷ்டம், அவருடைய கட்சியின் கொள்கை. அதே நேரத்தில், நாம் அந்தக் கடமையைச் செய்யவில்லை என்று சரித்திரம் சொல்லக் கூடாது. 2026 தேர்தலுக்குப் பிறகு, இன்னும் கொஞ்சம் முயன்று பேசியிருக்க வேண்டும் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது. ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அவர் நிறைய பயணங்களில் இருக்கிறார். சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்தவுடன் சந்திப்போம்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன். இதற்கு முன்பு முதல்வர் வெளிநாடு சென்றபோது அவரது கணக்காளரை ஏன் அழைத்துக் கொண்டு சென்றார் என்பதற்கு விளக்கமில்லை. அப்போது நோபல் ஸ்டீல் நிறுவனம் ரூ. 1000 கோடி முதலீடு செய்யும் என்று சொன்னார்கள். அந்த நிறுவனத்திற்கும் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழிக்கும் என்ன தொடர்பு என்று நாம் பேசினோம். முதல்வரின் முந்தைய வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டோம். தற்போது விஜய் இப்படிக் கேள்வி கேட்கிறார் என்றால், திமுகவின் சரித்திரம் அப்படி இருக்கிறது.

நாட்டில் எல்லா நிறுவனங்களும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நம் நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசின் மூலம் மாநிலங்களுக்கு வருகின்றன. அவர்கள் வருவதாகச் சொன்ன பிறகு, தமிழ்நாட்டில் ஒரு ஒப்பந்தம் போட்டு, முதலமைச்சரை அழைத்து புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார்கள். ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு முதலமைச்சர் செல்கிறார் என்பதற்காக 100 கோடி, 500 கோடி முதலீடு செய்யாது. ஒரு வருடத்திற்கு முன்பே முடிவு செய்துவிடுவார்கள். இது முதல்வர் கொண்டு வந்த முதலீடு அல்ல. மத்திய அரசு கொண்டு வந்த முதலீடு என்று இவர்கள் சொல்ல மாட்டார்கள்”

இவ்வாறு தெரிவித்தார்.