அண்ணாமலை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

டீயும் காஃபியும் ஒன்று கலக்காது: தவெகவுடனான கூட்டணி குறித்து அண்ணாமலை கருத்து | Annamalai |

ஏஎன்எஸ் பிரசாத் கட்சியின் மூத்த உறுப்பினர், அவர் வேறு பொறுப்பில் இருப்பார்...

கிழக்கு நியூஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் சேர்வாரா என்ற கேள்விக்கு டீயும் காஃபியும் ஒன்றாகக் கலக்க முடியாது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாஜக அங்கம் வகித்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் சேரும் என்று பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழ்நாடு பாஜகவில் மாநில செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து வந்த ஏஎன்எஸ் பிரசாத், விஜயை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை மாநில செய்தித் தொடர்பாளர் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிக்கை வெளியிட்டார்.

டீயும் காஃபியும் ஒன்று கலக்காது

இதற்கிடையில் சென்னை சைதாப்பேட்டையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய் கூட்டணியில் இணைவாரா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது:-

“பலமுறை விளக்கமளித்திருக்கிறோம். பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன் விஜயுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை டீயும் காஃபியும் எப்போதும் கலக்காது என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் எங்கள் சித்தாந்தங்கள் வேறு. ஆனால் ஊடக நண்பர்கள் யூகத்தின் அடிப்படையில் எழுதுகிறீர்கள். நாங்கள் இன்று வலிமையாக இருக்கிறோம். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக இருக்கிறது. தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். பெரும் வெற்றியும் பெறுவோம் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

ஏஎன்எஸ் பிரசாத் மீது நடவடிக்கை

ஏஎன்எஸ் பிரசாத் கட்சியின் மூத்த உறுப்பினர். நல்ல செய்தித் தொடர்பாளர். பத்திரிகைத் துறையில் மிக நெருங்கிய தொடர்புகளுடன் இருக்கக் கூடிய மனிதர். அவர் தொடர்பாக கட்சியின் மாநில தலைவரின் அறிவிப்பை நாம் தேவை இல்லாமல் முடிச்சு போட்டுக் கொண்டிருக்க வேண்டாம். அவர் இந்தத் தேர்தலில் வேறு பொறுப்புகளில் இருப்பார். அவரைக் கட்சி வேறு விதத்தில் பயன்படுத்தும். வேறு சில பொறுப்புகளைக் கொடுக்கும்” என்றார்.

Former BJP state president Annamalai said that tea and coffee cannot mix together when asked whether Vijay will join the National Democratic Alliance.