காங்கிரஸில் இருந்த நல்லவர்கள் இன்று தமிழ் மாநில காங்கிரஸில் இருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல் சமீப காலமாக வெளியில் தெரியத் தொடங்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இன்று காங்கிரஸ் தலைமையை மறைமுகமாகச் சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சிலரது சுயநலத்தால் காங்கிரஸ் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பாஜக மாநில முன்னாள் தலைவர் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கும் கட்சி என்று விமர்சித்தார். செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-
“காங்கிரஸைப் பொறுத்தளவில் யார் அதிகமாக தில்லிக்கு ஜிங்ஜா போடுவது என்று ஒரு குழுவும், யார் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜிங்ஜா போடுவது என்று ஒரு குழுவும் என இரண்டு தரப்புதான் செயல்பட்டு வருகிறது. இதைத்தவிர மக்களுக்காகப் பேசும் காங்கிரஸ் என்று யாருமே கிடையாது.
இன்று காலையில்கூட காங்கிரஸ் கட்சி விஜயுடன் கூட்டணிக்குச் சென்றுவிட்டால் பா. சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று நாளிதழ் ஒன்றில் செய்தி படித்தேன். காங்கிரஸின் முக்கிய உறுப்பினர் விஜயைப் போய் சந்தித்துவிட்டு வருகிறார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் கடன் சூழ்நிலையைப் பற்றிப் பேசுகிறார். நேரடியாகக் கருத்து சொல்கிறார், ஆனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஜோதிமணி மற்றொரு கருத்தைப் பதிவு செய்கிறார். இப்படி இருக்கும் நிலையில், பேசாமல் காங்கிரஸ் என்ற கடையை மூடிவிடலாம். ஏனென்றால் காங்கிரஸில் இருந்த நல்லவர்கள் எல்லாம் இன்று தமிழ் மாநில காங்கிரஸில் இருக்கிறார்கள். இப்போது இருப்பது இந்திரா காங்கிரஸ். காமராசரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. அதுதான் இந்திய தேசிய காங்கிரஸாக இப்போது இருக்கிறது. காமராசர் காலத்தில் இருந்த நல்லவர்கள் எல்லாம் மூப்பனார் காலத்திலேயே அவரது தலைமையை ஏற்று தமிழ் மாநில காங்கிரஸுக்குச் சென்றுவிட்டார்கள். இப்போது ஜிகே வாசனின் தலைமை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் என்பது அழிந்து கொண்டிருக்கும் கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அதன் தமிழ்நாட்டு தலைவரே ஒரு சான்று. காங்கிரஸ் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு 2026 தேர்தலில் சாலையில்தான் நிற்கப்போகிறார்கள். அதற்கான எல்லா வேலைகளையும் தொடங்கிவிட்டார்கள்” என்றார்.
BJP leader Annamalai has said that the good people who were in the Congress are in the Tamil Maanila Congress today.