சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆட்சி செய்வார்கள் என்று நினைத்தால், அது வேண்டாம் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு வரவுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுக்க மாவட்டந்தோறும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முதல் நாளாக மதுரையில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததால், அவருக்குப் பதிலாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:
"இந்த யாத்திரை எதற்காகத் தேவைப்படுகிறது? நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் யாத்திரை இன்று 167 தொகுதிகளைத் தாண்டி ஈரோடு மாநகரத்தில் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 63 தொகுதிகள் மட்டும் அவருக்கு மீதமிருக்கிறது. நம்முடைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று ஆரம்பிக்கக்கூடிய இந்த யாத்திரை 67 கட்சி மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறது. அங்கும் 67, இங்கும் 67. கணக்கைப் பாருங்கள். நிச்சயமாக இந்தக் கூட்டணிக் கணக்கு என்பது மக்களுடைய மனதைப் பிரதிபலிக்கக்கூடிய ஒரு கணக்காக மாறிக்கொண்டிருக்கிறது.
பாரதி ஜனதா கட்சியினுடைய தொண்டர்களை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும். ஆளும் கட்சியின் மீது கோபத்தில் இருக்கக்கூடிய பொதுமக்களை எல்லாம் சந்திக்க வேண்டும். மத்திய அரசின் மீது அன்பால், பாசத்தால் இருக்கக்கூடியவங்க எல்லாம் அரவணைக்க வேண்டும். அதற்குத் தலைவருடைய யாத்திரை தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டில் நான்கரை ஆண்டுகளில் நடந்த ஒரு சாதனையை நீங்கள் கூறுங்கள். அதனால்தான் அன்புச் சொந்தங்களே, நம்முடைய கடமை இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். அடுத்த முதல்வராக, இதற்கு முன்பு முன்னாள் முதல்வராக இருந்த அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 2026-ல் மறுபடியும் ஆட்சி கட்டிலுக்கு வர வேண்டும் என்கிற முடிவு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்து, இங்கே சென்னையில் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எந்த வாக்கும் கூட சிந்தாமல், சிதறாமல், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரில் இருக்கக்கூடிய இந்த வாக்குகள் எல்லாம், இந்தப் பக்கம் வர வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர வேண்டும்.
ஐயா, உங்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ சினிமா தியேட்டருக்கு செல்லுங்கள். அங்கு சென்று விசில் அடியுங்கள். ஹீரோவின் படங்களைப் பாருங்கள். படத்தைப் பார்த்துவிட்டு வெளிய வாருங்கள். அத்துடன் முடிந்துவிட்டது. சினிமாவில் நடிக்கிறவர்கள் நன்றாக ஆட்சி செய்வார்கள் என்று நினைத்தால், அது வேண்டாம். அதனால், இந்த 2026 தேர்தலைப் பொறுத்தவரை நம்முடைய வாக்கு சிந்தாமல், சிதராமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர வேண்டும். ஒரு ஒரு வாக்கையும் கொண்டு வர வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. யாராவது நான் மாற்றி வாக்களிக்கிறேன், மாற்றி யோசிக்கிறேன் என்று சொன்னால், பத்தாண்டு காலம் ஆட்சியைப் பாருங்கள், ஐந்தாண்டு காலம் ஆட்சியைப் பாருங்கள், தமிழகத்தினுடைய மாற்றத்தை பாருங்கள் என்று சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
இன்று திமுகவின் மனதில் இருக்கக்கூடிய அஸ்திரம், வாக்குப் பிளவு ஏற்பட்டால் நாங்கள் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்கிற மமதை, அகங்காரம். அதை உடைக்க வேண்டும். நம்முடைய வாக்குகள் நமக்கு முழுமையாக வர வேண்டும். கட்சியின் வாக்குகள் வர வேண்டும். பொதுமக்களுடைய வாக்குகள் நமக்கு வர வேண்டும். திமுகவுக்கு எதிரில் இருக்கக்கூடிய வாக்குகள் நமக்கு வர வேண்டும். அதற்காகவே இந்த யாத்திரை" என்றார் அண்ணாமலை.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியை அமைக்க பிள்ளையார்சுழி போடப்பட்டுவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் பிரசாரக் கூட்டங்களில் தவெக கொடி தொடர்ச்சியாகப் பறக்கிறது. தவெகவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார் என்பது அவருடைய அண்மைக் கூட்டங்களில் தென்படுகிறது. இந்நிலையில் தான், சினிமாவில் நடிக்கிறவர்கள் நன்றாக ஆட்சி செய்வார்கள் என்று நினைத்தால், அது வேண்டாம் என அண்ணாமலை பேசியிருக்கிறார்.
Annamalai | NDA | Nainar Nagenthran | Tamil Nadu BJP | AIADMK | ADMK | TVK | TVK Vijay | NDA Alliance | Edappadi Palaniswami | ADMK Alliance |