ANI
தமிழ்நாடு

நிலம் வாங்கியது உண்மைதான், பால் பண்ணை அமைக்கப் போகிறேன்: அண்ணாமலை விளக்கம் | Annamalai |

கடன் பெற்று வாங்கிய நிலத்திற்கு வட்டி கட்டி வருவதாகவும் பால்பண்ணை அமைக்கப் போவதாகவும் தகவல்...

கிழக்கு நியூஸ்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் புதிதாக நிலம் வாங்கி இருப்பதாக சர்ச்சை உருவான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் தலைவர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார். அதிலிருந்து தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பாஜக தொண்டர்களைச் சந்திப்பது, அவர்களது வீட்டுத் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்வது போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் அண்ணாமலை ரூ. 40 லட்சத்திற்கு நிலம் ஒன்று வாங்கியுள்ளார். இதுகுறித்து பல்வேறு சர்ச்சைக் கருத்துகள் வெளியாகின. இதையடுத்து அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை அண்ணாமலை இன்று (செப். 12) வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

”அண்மைக் காலமாக நான் காலமாக மேற்கொண்டு வரும் அரசியல் மற்றும் பிற பணிகளில் சில தரப்பினருக்கு "ஆர்வம்" ஏற்பட்டுள்ளது என் கவனத்திற்கு வந்தது. அதனால் இந்த விளக்கங்களை அளிக்கிறேன்.

இயற்கை விவசாயத்தின் மீது எனக்குள்ள ஆர்வம் மற்றும் எனது 'வி தி லீடர்ஸ்' அமைப்பிற்காக ஜூலை 12, 2025 அன்று நான் விவசாய நிலம் வாங்கியது உண்மைதான். நானும் எனது மனைவியும் ஈட்டிய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றின் மூலம் இந்த நிலத்தை வாங்கினேன். இந்த கடனுக்கான மாதாந்திர வட்டியை கடந்த இரண்டு மாதங்களாக எனது வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தி வருகிறேன். பதிவு செய்யும் நாளில் நான் நேரில் அங்கு இல்லை என்று கூறுபவர்கள், அசையா சொத்துக்களை வாங்கும் செயல், பவர் ஆஃப் அட்டர்னி (வக்காலத்து பத்திரம்) மூலமாகவும் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜூலை 10, 2025 அன்று, நான் நேரில் கலந்துகொண்டு எனது மனைவி திருமதி. அகிலாவுக்கு கல்லப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்தேன். இது தொடர்பான அனைத்து மாநிலச் சட்டங்களையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம். மேலும், முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் உள்ளிட்டவற்றையும் மாநில அரசுக்குச் செலுத்தியுள்ளோம், இதன் மொத்தத் தொகை ரூ. 40,59,220 ஆகும்.

இதில், நான் பால் பண்ணை அமைப்பதற்காகப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பித்துள்ளேன், அந்த விண்ணப்பம் தற்போது செயலாக்கத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு எனது வருமான வரி அறிக்கைகள் நிச்சயமாக இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சொல்லப்போனால், இது நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையா சொத்து ஆகும்.

தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக ஆனதிலிருந்து, ஏப்ரல் 2025 வரை எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகக் குறைந்த நேரமே கிடைத்தது. நானும் எனது மனைவியும் நாட்டின் மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றில் வணிக மேலாண்மைப் படிப்பை முடித்தவர்கள். இப்போது நான் எனது குடும்பத்திற்காகவும், எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவும் சட்டபூர்வமான வணிக வழிகளை மேற்கொண்டு வருகிறேன். இதிலும் அவர்களுக்குப் பிரச்சினைகள் இருந்தால், ஆண்டவன் தான் அவர்களுக்கு உதவ வேண்டும்.

நான், சமூக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வதன் மூலம், மற்றொரு ஆரம்ப நிலை முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். எனது அனைத்து செயல்களிலும் நான் உயர்ந்த நேர்மையைக் கடைபிடித்து வருகிறேன் என்பதைத் தெரிவிக்கவே இதை நான் வெளியிடுகிறேன். இதனால் என் மீது புகார்களை வைப்பவர்கள் வேறு எங்கேயாவது எலும்புகளைத் தேடட்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.

Annamalai | BJP | TN BJP | Annamalai explains to allegations |