ANI
தமிழ்நாடு

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்: அண்ணாமலை

இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கமாகத் தெரிகிறது.

ராம் அப்பண்ணசாமி

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று கோரியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நேற்று (ஜன.24) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது தமிழக அரசு.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது.

` வேங்கைவயலில் பட்டியல் சமூக மக்களுக்கான மேல்நிலை நீர்த்தொட்டியில் சமூக விரோதிகள் மனித மலம் கலந்ததாக தொடரப்பட்ட வழக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல், இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தற்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகள் என்று திமுக அரசு கூறியிருப்பது கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

கடந்த டிசம்பர் 24, 2022 அன்று மேல்நிலை நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீரைப் பயன்படுத்திய பட்டியல் சமூக மக்களுக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து வேங்கைவயல் கிராம இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தொட்டியில் ஏறிப் பார்த்தபோது உள்ளே கழிவுகள் மிதப்பதை கண்டறிந்தனர்.

வேங்கைவயல் பொதுமக்கள் டிசம்பர் 26, 2022 அன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள். ஆனால் விசாரணை என்ற பெயரில் பட்டியல் சமூக இளைஞர்களை காவல்துறையினர் துன்புறுத்தியுள்ளனர். எனவே, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதில் தொய்வு காட்டிய காவல்துறைக்கும், அரசுக்கும் எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

பொதுமக்கள் போராட்டத்திற்குப் பிறகு, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, மார்க்ஸ் ரவீந்திரன் என்பவர் 24.02.2023 அன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

29.03.2023 அன்று, இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். சத்தியநாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த ஒரு நபர் ஆணையம் இன்று வரை இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

கடந்த 16.04.2024 அன்று, இந்த வழக்கு தொடர்பான பொதுநல மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை எனவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் கூறிய உயர் நீதிமன்ற அமர்வு, மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.

ஆனால் அதற்குப் பின்னரும், சிபிசிஐடி விசாரணையை நடத்தி முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையே 23.01.2025 அன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன் பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 20.01.2025 அன்று புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

குற்றம் நடைபெற்று சுமார் 750 நாட்கள் ஆகின்றன. இத்தனை நாட்களும் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் வழக்கு விசாரணையில் இல்லை. தொடக்கம் முதலே, வழக்கு விசாரணையின் போக்கு முறையானதாக இல்லை. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்படவில்லை.

அவசர அவசரமாக, பட்டியல் சமூக இளைஞர்கள் மூன்று பேர் மீதே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாகக் கூறுவது, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கமாகத் தெரிகிறது.

எனவே, இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்’ என்றார்.