பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

முதலமைச்சருக்கு 100 நாள் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா?: அண்ணாமலை கேள்வி | MNREGA |

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த முதலமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி...

கிழக்கு நியூஸ்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை விக்சித் பாரத் - கேரன்டி ஃபார் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா என்று மாற்றி, அந்தத் திட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஏற்கெனவே தனது கண்டனத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் விதமாக முதலமைச்சர் மற்றொரு பதிவை இன்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் விக்சித் பாரத் - கேரன்டி ஃபார் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா திட்டம் குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? விவசாய சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா பழனிசாமி? மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்? திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி ஜெயலலிதா இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா? வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்? இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்” என்று பதிவிட்டார்.

இந்நிலையில், இதனைப் பகிர்ந்துள்ள பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

“இந்தத் திட்டம் குறித்து, நேற்றே தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் சமஸ்கிருத மொழியில் வைத்துக் கொண்டு, ஹிந்தி எதிர்ப்பு என்று இன்னும் நாடகமாடிக் கொண்டிருப்பது நகைமுரண். 100 நாள் வேலைத் திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம் என்று அளித்த வாக்குறுதி நினைவிருக்கிறதா? முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

BJP state former president Annamalai has questioned whether Chief Minister Stalin is worried that he will no longer be able to commit corruption in the 100-day employment scheme as before.