அண்ணாமலை 
தமிழ்நாடு

மத்திய பட்ஜெட் 2024: முதல்வரின் பதிவுக்கு அண்ணாமலை பதில்!

யோகேஷ் குமார்

வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே பதிவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று அவருடைய பட்ஜெட் குறித்த அறிக்கையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23-ல் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள விவரங்களை குறிப்பிட்டு, “தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, “மோடி கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் எக்ஸ் பதிவு

"மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2014 - 2024 வரையிலான, பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு வழங்கிய நலத்திட்டங்களின் மதிப்பு ரூ.10.76 லட்சம் கோடி.

தமிழகத்தின் நேரடி வரிப்பங்கீடை விட, இது இரண்டு மடங்கு அதிகம். ஆனால், மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசின் பங்கு என்ன என்று எதுவும் தெரியாமல், வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே பதிவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

கடந்த 2006 தேர்தலின்போது, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியான, கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 9,386 கோடி நிதியில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது முதலமைச்சருக்குத் தெரியுமா அல்லது பணிகள் நிறைவடைந்ததும் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற நலத் திட்டங்களை நிறைவேற்றிய மோடி, வரும் காலங்களிலும் தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவார். ஆனால், இங்கு திமுக அரசோ, தாங்கள் செய்யவேண்டிய பணிகளை மறந்து மற்றவர்களை விமர்சிப்பதை முழு நேர வேலையாகக் கொண்டுள்ள போக்கை இனி வரும் காலங்களிலாவது மாற்றிக் கொள்ள வேண்டும்”.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.