தமிழ்நாடு

திமுக மீதான கோபம் பாஜகவுக்கு சாதகமாக மாறுகிறது: பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் திமுக மீதுள்ள கோபம் பாஜகவுக்கு சாதகமானதாக மாறிவருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

"தென்னிந்தியாவில் எங்களுடையக் கட்சி ஐந்து தலைமுறைகளாக செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் மீது அதிருப்தி ஏற்பட்டதால், மாநிலக் கட்சிகள் நோக்கி மக்கள் நகர்ந்தார்கள். தற்போது இந்த மாநிலக் கட்சிகள் மீது மக்கள் ஏமாற்றத்தில் உள்ளார்கள். இந்தச் சூழலில்தான் தில்லியில் பாஜக அரசைப் பார்த்துள்ளார்கள். மற்ற மாநிலங்களில் பாஜக அரசைப் பார்த்துள்ளார்கள்.

பானிபூரி விற்பவர்கள் என்று திமுகவினர் நம்மைக் கேலி செய்வார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் காசி சங்கமத்துக்கு வந்து பார்த்தால், அவர்கள் கேட்டதுபோல அல்ல. இந்தப் பகுதிகள் வளர்ச்சியடைந்துள்ளன. நிறைய முன்னேற்றம் நடந்துள்ளன. இதன் காரணமாக மக்களுக்குத் திமுக மீது நிறைய கோபம் உள்ளது. இந்தக் கோபம் பாஜகவை நோக்கி நேர்மறையாக மாறுகிறது" என்றார்.

சனாதன தர்மத்துக்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு தொடர்புடைய கேள்விக்கு அவர் பதிலளித்தாவது:

"இந்தக் கேள்வியை நான் வேறொரு கோணத்தில் பார்க்கிறேன். இந்தக் கேள்வியை காங்கிரஸிடம் கேட்க வேண்டும். சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன்? உங்களுடைய அரசியல் ஏன் முழுமையடையாமல் உள்ளது? காங்கிரஸின் சிந்தனை என்ன? இது கவலைக்குரிய விஷயம். இந்த வெறுப்புணர்விலிருந்துதான் திமுகவின் தோற்றமே இருக்கக்கூடும். காங்கிரஸ் தனது அடையாளத்தை இழந்துவிட்டதா?" என்று பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார்.