வாக்குச்சாவடி அலுவலர்களாக செயல்பட கூடுதலாக புதிய துறைகள் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் என்றாலே வாக்குச்சாவடி அலுவலர்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட பணியாளர்கள் ஆகியோரைத் தேர்தல் பணிக்கு பயன்படுத்தலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வாக்குச்சாவடி அலுவலர்களாக மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டால், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட பணியாளர்கள் ஆகியோரைப் பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 68,000 ஆக இருந்த வாக்குச் சாவடிகள் 74,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.