அனைத்துக் கட்சிகளிலும் காரசாரமான விவாதங்கள் நடைபெறுவது சகஜம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராம் நியமிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
முகுந்தன் பரசுராம் ராமதாஸின் மகள்வழி பேரன். இவர் கட்சியில் இணைந்து 4 மாதங்களே ஆவதால், இவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பை வழங்க அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இதற்கு, "யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும், இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்காதவர்கள் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது" என்று ராமதாஸ் காட்டமாகப் பேசினார்.
உடனடியாக, சென்னையை அடுத்த பனையூரில் தான் புதிய அலுவலகம் ஒன்றைத் திறந்திருப்பதாகவும் அங்கு வந்து தன்னைச் சந்திக்கலாம் என்று அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே அறிவித்தார். இருவருக்கும் இடையே மறைமுகமாக இருந்த பிரச்னை, வெளிப்படையாக பொதுக்குழு மேடையில் வெளிப்பட்டு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பாகப் பேசப்பட்டது.
பொதுக்குழுவில் இருந்து புறப்பட்ட அன்புமணி, பனையூர் வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து, ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரசத்தை ஏற்படுத்த கட்சியின் மூத்த தலைவர்கள் ஜி.கே. மணி உள்ளிட்டோர் ஈடுபட்டார்கள்.
இவற்றின் தொடர்ச்சியாக, இன்று நண்பகல் 12 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸைச் சந்தித்தார் அன்புமணி. இந்தச் சந்திப்பின்போது ஜி.கே. மணி உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்புணி ராமதாஸ் கூறியதாவது:
"இன்று தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ஐயாவுடன் (ராமதாஸ்) கட்சியின் வளர்ச்சி, வரும் சட்டப்பேரவைத் தேர்தல், சித்திரை முழு நிலவு மாநாடு, சாதிவாரிக் கணக்கெடுப்பு மற்றும் அதுசார்ந்த போராட்டங்கள் உள்ளிட்டவை பற்றி, விவசாய மாநாட்டுக்குப் பிறகு அடுத்தக் கட்டம் என்னென்ன போராட்டங்களை எந்தெந்த பகுதிகளில் செய்யலாம் என்று குழுவாக இன்று விவாத்திதோம்.
வரும் ஆண்டு எங்களுக்கு மிக முக்கியமான ஓர் ஆண்டு. இந்த ஆண்டில் எங்களுடையச் செயல் திட்டங்கள், அடுக்கடுக்காகப் போராட்டங்கள், மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எங்களுடையப் பொதுக்குழுவில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம், அதற்கேற்ப நடவடிக்கைகள் எல்லாம் எப்படி எடுக்க வேண்டும், சாதிவாரிக் கணக்கெடுப்பு, 10.5% இடஒதுக்கீடு போன்ற செயல் திட்டங்களை எல்லாம் இன்று ஐயா தலைமையில் விவாதித்து அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கிறோம்.
எங்களுடையக் கட்சி ஒரு ஜனநாயகக் கட்சி. ஜனநாயகக் கட்சியில் நிகழும் பொதுக்குழு. காரசாரமான விவாதங்கள் எல்லாக் கட்சியிலும் நடப்பது சகஜம். எங்களுக்கு ஐயா (ராமதாஸ்), ஐயா தான். இன்று நாங்கள் ஐயாவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். இதுதான் ஜனநாயகக் கட்சி" என்றார் அன்புமணி.
தொடர்ந்து, முகுந்தன் பரசுராமன் குறித்த கேள்விக்கு, "எங்கள் கட்சியின் உள்கட்சிப் பிரச்னை குறித்து யாரும் பேசத் தேவையில்லை. அது எங்களுடைய உள்கட்சிப் பிரச்னை. நாங்கள் பேசிக்கொள்வோம்" என்று கூறியபடி நகர்ந்து சென்றார் அன்புமணி ராமதாஸ்.