அன்புமணியைக் கட்சியிலிருந்து நீக்குவதாக வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸின் அறிவிப்பு எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே. பாலு அறிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகனும் செயல் தலைவருமான அன்புமணி இடையே அண்மைக் காலமாகத் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்தது பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு. இதுதொடர்பாக அன்புமணியிடம் விளக்கம் கேட்டு இருமுறை அவகாசம் வழங்கப்பட்டது. இறுதி அவகாசம் செப்டம்பர் 10 உடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், அன்புமணியைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அன்புமணி தரப்பில் பாமகவின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே. பாலு செய்தியாளர்களைச் சந்தித்து இதுதொடர்பாக விளக்கமளித்தார்.
"பாட்டாளி மக்கள் கட்சியினுடைய விதிகளின் படி, கட்சி சட்டத்தின்படி கட்சியினுடைய நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் என்பது பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் சொல்கிறேன் – கட்சியினுடைய விதிகளின் படி, கட்சியினுடைய நிறுவனருக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் என்பது வழங்கப்படவில்லை. பதவி நீக்கம் செய்வது, கூட்டங்கள் நடத்துவது, எந்த முடிவுகளாக இருந்தாலும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியினுடைய தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.
எனவே, இன்றைக்கு ராமதாஸ் அவர்கள் வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பு என்பது கட்சி விதிகளுக்கு எதிரானது. ராமதாஸின் அறிவிப்பு பாட்டாளி மக்கள் கட்சியை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது.
கட்சியினுடைய தலைவராக அன்புமணி ராமதாஸ் அவர்கள் தொடர்ந்து வருகிறார். இந்தச் சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஆகஸ்ட் 9 அன்று மகாபலிபுரத்தில் கட்சியினுடைய பொதுக்குழு கூட்டம் நடத்தப்பெற்றது. அந்தப் பொதுக்குழு கூட்டத்தில், தேர்தல் நெருங்கி வரக்கூடிய வேளையில் கட்சியினுடைய அமைப்புத் தேர்தலை நடத்துவதற்கான உரிய சூழல் இல்லை. எனவே கட்சியினுடைய தலைவர், செயலாளர், பொருளாளர் மூன்று பேருடைய பதவிக் காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அந்தத் தீர்மானம் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒட்டுமொத்தமாக, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அந்தத் தீர்மானமானது அன்று வெளியிடப்பட்டது.
பொதுக்குழுவினுடைய தீர்மானத்தைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய தலைமை தேர்தல் ஆணயத்திற்குப் பொதுக்குழுவினுடைய முடிவுகளை ஆகஸ்ட் மாதம் 10, 11 அன்று முறைப்படி தெரிவித்தோம்.
எங்களுடைய மனுவை, எங்களுடைய விளக்கத்தை தேர்தல் ஆணையம் உரிய விதத்தில் ஆய்வு செய்து, பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர், செயலாளர், பொருளாளர் அவர்களின் பதவி காலத்தை பொதுக்குழுவினுடைய தீர்மானத்தின்படி அடுத்த 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். அந்த உத்தரவு எங்களுக்கு முறைப்படி வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவராக அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா தொடர்கிறார்கள்.
இன்றைய தினத்தில், கட்சியினுடைய தலைவர், செயலாளர், பொருளாளர்கள் – தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய வகையில், இன்றைக்கு ராமதாஸ் அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு கட்சியினுடைய அமைப்பு விதிகளின் படியும், தேர்தல் ஆணையம் சமீபத்தில் வழங்கிய அங்கீகாரம் உத்தரவின் அடிப்படையிலும் செல்லத்தக்கது அல்ல.
பாட்டாளி மக்கள் கட்சியை எந்தவிதத்திலும் ராமதாஸ் அவர்களுடைய அறிவிப்பு கட்டுப்படுத்தாது.
நாங்கள் கட்சியினுடைய விதிகளின் அடிப்படையில் தான் சொல்கிறோம். எனவே நிறுவனர் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனர். ஆனால் அதே வேளையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை.
இதன் மூலமாக பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடக நண்பர்களுக்கு நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் – இனிவரும் காலங்களில்
பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர், செயலாளர், பொருளாளர் என்பது மருத்துவர் அன்புமணி ராமதாஸ், வடிவேல் ராவணன், திலகமா அவர்கள் தான்.
அதை அடிப்படையாக கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிர்வாகிகள் என்ற பெயரில் நீங்கள் எந்தச் செய்தியும் வெளியிட வேண்டாம் என்பதே எங்களுடைய அன்பு வேண்டுகோள்.
கட்சியினுடைய நிறுவனர் ராமதாஸ் அவர்கள், நிறுவனர் என்ற முறையில் தொடர்கிறார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே வேளையில் "மற்ற பணிகள் மாற்றப்பட்டதாகவும், வேறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும், அவர்கள் சில நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. நேற்றுகூட கட்சிப் பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிவிப்பு வெளியானது.
எனவே இன்றிலிருந்து நீங்கள் இதுபோன்று கட்சியினுடைய தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான இந்த குழப்பமான நிலையை நீட்டிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தேர்தல் ஆணயம் முறையாக எங்களுக்கு தலைவர், செயலாளர், பொருளாளருக்கான பதவியை அங்கீகரித்து, அதன் காலத்தை 2026 வரை நீட்டித்திருக்கிறது.
அந்த அடிப்படையில், ராமதாஸின் அறிவிப்பு பாட்டாளி மக்கள் கட்சியை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது" என்றார் கே. பாலு.
Ramadoss |Anbumani Ramadoss | PMK | K Balu | Election Commission |