கோப்புப்படம் படம்: https://x.com/PMKAdvocateBalu
தமிழ்நாடு

அன்புமணி தான் தலைவர்: தேர்தல் ஆணையம் கடிதத்தை வெளியிட்ட கே. பாலு | PMK | Anbumani Ramadoss |

"அன்புமணியைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கக் கூடியவர்கள் மட்டும்தான் பாமகவின் கொடியைப் பயன்படுத்த முடியும்."

கிழக்கு நியூஸ்

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை பாமக செய்தித் தொடர்பாளர் கே. பாலு இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ராமதாஸ் மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையிலான மோதல் போக்கு கடந்த வாரம் உச்சத்தைத் தொட்டது. அன்புமணியைக் கட்சியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். ஆனால், பாமக செய்தித் தொடர்பாளர் கே. பாலு உடனடியாக செய்தியாளர்களைச் சந்தித்து ராமதாஸின் முடிவு பாமகவைக் கட்டுப்படுத்தாது என விளக்கமளித்தார். மேலும், கட்சித் தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தகவலொன்றைத் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரிலுள்ள பாமக தலைமை அலுவலகத்தில் கே. பாலு மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்தற்கான கடிதம் ஒன்றை அவர் வெளியிட்டார்.

"பாமகவின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம். பாமகவின் தலைமை அலுவலகமாக தற்போது செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறக்கூடிய இந்த இடமான எண்: 10, திலக் தெரு, தியாகராய நகர், சென்னை -17 என்பதைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான பதவி காலம் 2026 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை நீட்டித்து இந்த மூன்று முக்கியமான முடிவுகளை தேர்தல் ஆணயம் எங்களுக்கு வழங்கியிருக்கிறது. அதனுடைய கடிதத்தை தான் உங்களுக்கு இப்பொழுது நாங்கள் காட்டினோம்.

கடந்த ஒன்பதாம் தேதி ஆகஸ்ட் மாதம் மகாபலிபுரத்தில் பொதுக்குழு நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவைத் தொடர்ந்து செப்டம்பர் 10 அன்று அதனுடையத் தீர்மான நகல்களையும் கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் முறைப்படி தெரிவித்தோம். அதிலுள்ள சில கூடுதல் தகவல்களை அடுத்த நாள் 11 அன்று கொடுத்தோம். இந்த இரண்டு கடிதத்தையும் அடிப்படையாகக் கொண்டு கடந்த ஒரு மாத காலமாக இதை ஆய்வு செய்து தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் அவருடைய பதவி காலத்தை ஆகஸ்ட் 2026 ஒன்றாம் தேதி வரை நீட்டித்து அதற்கான அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறார்கள்.

கட்சியினுடைய தேர்தல் கட்சியினுடைய தலைமை அலுவலகமாக நமது இப்பொழுது இருக்கக்கூடிய இந்த சென்னை அலுவலகத்தை அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். அதோடு கட்சியினுடைய தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என்பதையும் உறுதி செய்திருக்கிறார்கள்.

இன்னொரு கூடுதலான செய்தி பாட்டாளி மக்கள் கட்சிக்கான சின்னமான மாம்பழம் சின்னமும் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவதற்கான அனுமதியும் இதற்கு முன்பாகவே தேர்தல் ஆணயம் எங்களுக்கு வழங்கி இருக்கிறது.

அதன் அடிப்படையில் தேர்தலின்போது சின்னம் ஒதுக்குவதற்கான B ஃபார்மில் கையொப்பமிடுவதற்கான அங்கீகாரம் என்பதும் அன்புமணி ராமதாஸுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக சமீப காலமாக இருந்த சில குழப்பங்கள் இப்பொழுது தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த பாமகவினரையும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில், பாமகவை அன்புமணி ராமதாஸ் சிறப்பாக வழிநடத்தக்கூடிய வகையில் இந்த அறிவிப்பு என்பது வெளிவந்திருக்கிறது. அது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தருணத்தில் நாம் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் கட்சியினுடைய தலைவர் அன்புணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, கட்சியினுடைய நிறுவனர் ராமதாஸ் தான்.

அன்புமணியைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்க கூடியவர்கள் மட்டும்தான் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கொடி பயன்படுத்த முடியும். இனிவரும் காலங்களில் பத்திரிக்கை தொலைக்காட்சி ஊடக நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். பாட்டாளி மக்கள் கட்சி என்பது அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் உள்ள இயக்கம்தான். இந்த அணி, அந்த அணி என்று போடுவதைத் தயவு செய்து இந்த நிமிடத்திலிருந்து தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோன்று தலைவர் அன்புமணியோடு இருக்கக்கூடிய பொறுப்பாளர்கள் தான் கட்சியினுடைய நிர்வாகிகளாக இருந்து வருகிறார்கள். நான் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான செய்தி தொடர்பாளர்" என்றார் கே. பாலு.

PMK | K Balu | Anbumani Ramadoss | Ramadoss | Election Commission |