தமிழ்நாடு

தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார்!

புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களில், அதிகபட்சமாக உ.பி.யில் 19 ரயில் நிலையங்கள் உள்ளன.

ராம் அப்பண்ணசாமி

தமிழகத்தில் 9 ரயில் நிலையங்கள் உள்பட அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (மே 22) திறந்து வைக்கிறார்.

மத்திய ரயில்வே அமைச்சகத்தால் கடந்த 2023 முதல் அமிரித் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,337 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு, பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் மின் தூக்கிகள், நடை மேம்பாலங்கள், நகரும் படிக்கட்டுகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், சிசிவிடி கேமரா, மின்னணு தகவல் பலகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தனியார் பங்களிப்புடனும் இந்த திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதிலும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை வரும் மே 22-ல் பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் பீகானீரில் இருந்தபடி திறந்து வைக்கிறார்.

இதில், தமிழகத்தில் உள்ள போளூர், திருவண்ணாமலை, சிதம்பரம், சாமல்பட்டி, பரங்கிமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருதாச்சலம் மற்றும் குழித்துறை ஆகிய 9 ரயில் நிலையங்களும் அடக்கம்.

புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களில், அதிகபட்சமாக உ.பி.யில் 19 ரயில் நிலையங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக, குஜராத்தில் 18 ரயில் நிலையங்களும், மஹாராஷ்டிரத்தில் 15 ரயில்நிலையங்களும், தமிழகத்தில் 9 ரயில்நிலையங்களும், ராஜஸ்தானில் 8 ரயில் நிலையங்களும், சத்தீஸ்கரில் 5 ரயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளன.