முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பதை அமமுக ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தஞ்சையில் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவச் சிலைக்கு அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை இட்டு மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது -
”தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்து ஏன் வெளியே வந்தேன் என்பதை பல இடங்களில் கூறிவிட்டேன். அறைத்த மாவையே அறைக்க விரும்பவில்லை. இந்த முறை அமமுக வெற்றி முத்திரை பதிக்கும். நாங்கள் இதை அகங்காரத்திலோ மற்றவர்கள் மாதிரி ஆணவத்திலோ சொல்லவில்லை. உறுதியாகச் சொல்கிறேன், அமமுக இடம் பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும். விஜய் ஜெயலலிதா வழியில் போய்க் கொண்டிருக்கிறார் என்று நான் எங்கே சொன்னேன்? செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது ஜெயலலிதா பாணியில் விஜய் பேசுகிறார் என்றால் அது ஜெயலலிதாவைப் பின்பற்றும் எங்களுக்குப் பெருமைதான் என்றுதான் சொன்னேன். எல்லா கட்சியும் அவர்களுடைய கட்சி வாக்கு அதிகரிக்கும் என்றுதான் பேசுவார்கள், சொல்வார்கள். அது அவர்களுடைய இயல்பு. இப்போது நான் சொல்லவில்லையா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியாக வெற்றி முத்திரை பதிக்கும். நாங்கள் இடம் பெறுகின்ற கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறேனே, அதன் அர்த்தத்தை நீங்கள் மே மாதம் புரிந்துகொள்ளுங்கள்.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிற பட்சத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை. நான் அரசியல் ஆரூடம் சொல்லும் அளவுக்கு பெரிய அரசியல் ஞானி இல்லை. ஊடகத்தைச் சேர்ந்தவர்களும் அரசியல் வல்லுநர்களும்தான் அதைப் பற்றி எல்லாம் சொல்ல வேண்டும். நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். எனது அனுபவத்தில், எங்கள் இயக்கத்தின் மீது உள்ள நம்பிக்கையிலும், தமிழ்நாட்டு மக்கள் மீது உள்ள நம்பிக்கையிலும், 75 வருட கட்சிக்கும், 50 வருட கட்சிக்கும் இணையாக கட்டமைப்பு உள்ள இயக்கமாக அமமுக உருவாகிவிட்டது. உறுதியாக இந்தத் தேர்தலில் நாங்கள் அங்கம் வைக்கிற கூட்டணி ஆட்சி அமைக்கும்”
இவ்வாறு தெரிவித்தார்.
TTV Dhinakaran | AMMK | ADMK | Edappadi Palaniswami | TN Politics | TN Elections 26 | TVK Vijay |