படம்: twitter.com/TTVDhinakaran
படம்: twitter.com/TTVDhinakaran
தமிழ்நாடு

டிடிவி தினகரன் தேனியில் போட்டி!

கிழக்கு நியூஸ்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடுகிறது. அமமுகவுக்கு திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தாங்கள் ஒரு தொகுதி இருந்தால்கூட போதுமானது என்றபோதிலும், பாஜகவினர்தான் குறைந்தபட்சம் இரு தொகுதிகளிலாவது நீங்கள் போட்டியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தற்போது இந்த இரு தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர்களை டிடிவி தினகரன் இன்று காலை வெளியிட்டார். திருச்சியில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

திருச்சியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக கருப்பையா களம் காண்கிறார்.

தேனியில் திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அதிமுகவில் முன்பு பிளவு ஏற்பட்டபோது, தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரன் அணியில் இருந்தார். தேனியில் அதிமுக வேட்பாளராக வி.டி. நாராயணசாமி போட்டியிடுகிறார்.

ஓ. பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் ஆகியோர் தான் தன்னை தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடச் சொன்னதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"அருமை நண்பரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர்தான், நான் இங்கு போட்டியிட வேண்டும் என்றார்கள். கடந்த மாதம் 24-ல் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்காக தேனி வந்து திரும்பும்போது, நீங்கள் தான் தேனியில் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் அழைத்தார்கள்.

உண்மையில் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் இருந்தேன். மற்ற தொகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தேன். அவர் அழைத்தபிறகு சிந்தித்தேன். ஓ. பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொண்டு பேசினேன்.

நீங்கள் போட்டியிட விரும்பினால், எந்தத் தொகுதியில் போட்டியிடுவீர்கள் என்று கேட்டார். போட்டியிட்டால் நிச்சயமாக தேனியில்தான் போட்டியிடுவேன் என்றார். இதைப் புரிந்துகொண்டு அவர் எனக்கு வழிவிட்டு ராமநாதபுரம் சென்று அங்கு போட்டியிடுகிறார். அவரும் பெற்றி பெறுவார்" என்றார் டிடிவி தினகரன்.