தமிழ்நாடு

அமித்ஷாவா? சந்தான பாரதியா?: போஸ்டர் குறித்து பாஜக நிர்வாகி விளக்கம்!

சிஐஎஸ்எஃப் 56-வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

ராம் அப்பண்ணசாமி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலாக, இயக்குநர் சந்தான பாரதியின் புகைப்படத்தை அச்சிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து விளக்கமளித்துள்ளார் பாஜக பிரமுகர் அருள்மொழி.

அரக்கோணத்திற்கு அருகே உள்ள நகரிக்குப்பத்தில் சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பயிற்சி மையம் உள்ளது. இதில், இன்று (மார்ச் 7) நடைபெற்ற சிஐஎஸ்எஃப் 56-வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

அமித்ஷா வருகையையொட்டி, அவரை வரவேற்கும் விதமாக ராணிப்பேட்டை பகுதியில் ஒட்டப்பட்டிருந்த பாஜக போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

அதில், அமித்ஷா புகைப்படத்துக்குப் பதிலாக பிரபல இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் புகைப்படத்தை அச்சிட்டு, `இந்தியாவின் இரும்பு மனிதரே! வாழும் வரலாறே வருக, வருக!’ என்பதுடன், ராணிப்பேட்டையைச் சேர்ந்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி என்றவரின் பெயர் அதில் குறிப்பிட்டிருந்தது.

இது தொடர்பாக தன்னிலை விளக்கமளித்து பாஜகவைச் சேர்ந்த அருள்மொழி வெளியிட்ட காணொளியில் கூறியதாவது,

`நான் அருள்மொழி. பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். அமித்ஷா அரக்கோணம் வருவதை ஒட்டி போஸ்டர் ஒட்டுவதாகக் கூறி அவரை அவமானப்படுத்தும் விதமாக என் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இது தொடர்பாக காவல்துறையிடம் புகாரளிக்க இருக்கிறேன்’ என்றார்.