திருச்சியில் நடைபெற்ற பாஜகவின் பிரமாண்ட பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக நேற்று (ஜன.4) தமிழ்நாட்டிற்கு வந்தார். முதல் நிகழ்ச்சியாக புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசார பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் திருச்சி வந்த அவர், தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் இன்று காலை ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பிரமாண்ட பொங்கல் விழா
தொடர்ந்து திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் "நம்ம ஊரு மோடி பொங்கல்" என்ற பெயரில் மிக பிரமாண்ட அளவில் சிறப்பு பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு 1,008 பொங்கல் பானைகளுடன் பெண்கள் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தார். அவர் வருகை தந்தபோது அவருக்கு விழாக் குழுவினர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை
அதனைத் தொடர்ந்து திருச்சியில் தனியார் நட்சத்திர விடுதியில் இரண்டாவது நாளாக கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உடனிருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த ஓபிஎஸ், டிடிவி தினகரன், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
Union Minister Amit Shah attended the BJP's grand Pongal celebration held in Trichy.