தமிழ்நாடு

நடிகை வாக்குமூலத்தில் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி: உயர் நீதிமன்றம்

மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை திரும்பப் பெற்றது தெளிவாகிறது.

ராம் அப்பண்ணசாமி

நடிகையின் வாக்குமூலத்தின் மூலம் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக கடந்த 2011-ல் நடிகை ஒருவர் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதியப்பட்டது.

தனக்கு எதிராக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்தாண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் சீமான்.

அந்த மனுவில், `கடந்த 2011-ல் அளித்த புகாரை 2012-ல் திரும்பப் பெற்றுக்கொள்வதாக நடிகை கடிதம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், அந்த வழக்கை காவல்துறை முடித்து வைத்தது. இந்நிலையில், மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சீமான் தாக்கல் செய்த இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், நடிகை தரப்பு வாதம் சீல் இடப்பட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சீமான் தொடர்ந்த வழக்கு மீதான இறுதி விசாரணையை கடந்த பிப்.17 அன்று நடத்தினார் நீதிபதி ஜி. இளந்திரையன். சீமான் மீது நடிகை அளித்த புகாரை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, சீமான் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி இளந்திரையன்.

இந்நிலையில், சீமான் தொடர்ந்த வழங்கின் இறுதி தீர்ப்பு விவரம் இன்று வெளியாகியுள்ளது. அதில், மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை திரும்பப் பெற்றது தெளிவாகிறது என்றும், பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது அதை தன்னிச்சையாக அதை திரும்பப் பெற முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நடிகையின் வாக்குமூலத்தின் மூலம் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீமான் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் வழக்கு மீதான விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்று காவல்துறைக்கு கடந்த முறை உத்தரவிடப்பட்டிருந்தது.