கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலட்சினையை அஜித் பயன்படுத்தியிருப்பதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"உலக அளவில் சிறப்புக்குரிய 24ஹெச் துபாய் 2025 மற்றும் ஐரோப்பிய 24ஹெச் சீரிஸ் சாம்பியன்ஷிப் போர்ஷ் 992 ஜிடி3 கப் கிளாஸ் கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலட்சினையை அஜித்குமார் ரேசிங் யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித்துக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித்துக்கு எங்கள் அன்பும், நன்றியும்.
விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார் பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித்" என்று உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.