படம்: https://twitter.com/Udhaystalin
தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு: கார்த்திக் முதலிடம்

அமைச்சரின் சூழ்ச்சியால் தான் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதாக 17 காளைகளை அடக்கிய அபிசித்தர் குற்றச்சாட்டு

கிழக்கு நியூஸ்

மதுரையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கருப்பாயூரணி கார்த்திக் என்ற இளைஞர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து போட்டியைத் தொடக்கிவைத்தார்.

இந்தப் போட்டியில் ஏறத்தாழ மொத்தம் 1,200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றார்கள்.

விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை நிறைவடைந்தது. போட்டியின் முடிவில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்தி என்பவர் முதலிடத்தைப் பெற்றார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி இரண்டாவது இடம் பிடித்தார். என். குன்னத்தூரைச் சேர்ந்த திவாகர்12 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இரண்டாவது இடம் பிடித்த அபிசித்தர், தான் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், முதலிடத்தைப் பிடித்த கார்த்திக் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அமைச்சரின் (மூர்த்தி) சூழ்ச்சியால் அவருக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், கேள்வியெழுப்ப முயன்றபோது தான் குடும்பத்தோடு அவமதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 25 காளைகளை அடக்கியதாகவும் இதற்கான விடியோ இருப்பதாகவும் அபிசித்தர் தெரிவித்தார்.

இரண்டாவது இடம் பிடித்த அபிசித்தர் கடந்தாண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 26 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.