தமிழ்நாடு

அஜித்குமார் நண்பர் சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கிய ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு!

அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் தாக்குவதை தனது கைப்பேசியில் சக்தீஸ்வரன் பதிவு செய்திருந்தார்.

ராம் அப்பண்ணசாமி

காவல் மரண வழக்கில் உயிரிழந்த திருப்புவனம் அஜித்குமாரின் நண்பர் சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நகை திருட்டுப் புகாரின்பேரில் கடந்த ஜூன் 28 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார்.

அஜித்குமாரை தனிப்படை காவல்துறையினர் தாக்குவதை அவரது நண்பரும், சக ஊழியருமான சக்தீஸ்வரன் தனது கைப்பேசியில் ரகசியமான முறையில் பதிவு செய்தார். அதன்பிறகு, பொது வெளியில் வெளியிடப்பட்ட அந்த காணொளி, இந்த காவல் மரண வழக்கு விசாரணையில் முக்கியப் பங்காற்றியது.

மேலும், உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையிலும், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட நீதிபதி மேற்கொண்ட நேரடி விசாரணையிலும் ஆஜராகி சக்தீஸ்வரனும், சக கோயில் பணியாளர்களும் வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 3) செய்தியாளர்களை சந்தித்த சக்தீஸ்வரன், இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளித்தவர்கள் பயப்படும் சூழல் தற்போது உருவாகியுள்ளதாகவும், வாக்குமூலம் அளித்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

மேலும், தனக்குக் காவல்துறை பாதுகாப்பு அளிக்கக்கோரி, தமிழக டிஜிபியிடம் சக்தீஸ்வரன் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தென்மண்டல ஐஜியின் உத்தரவின்பேரில், ராமநாதபுரத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய இரு காவலர்கள் சக்தீஸ்வரன் பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.