தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கிய தமிழக அரசு

கிழக்கு நியூஸ்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

மதுரை - திருமங்கலம் அருகே தோப்பூரில் மத்திய அரசின் ‘எய்ம்ஸ்' மருத்துவமனை கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி மதிப்பீட்டில் 222 ஏக்கரில் கட்டப்படுகிறது. பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி, எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான டெண்டரை எடுத்துள்ளது. 33 மாதங்களில் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. சமீபத்தில், மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் வீ. காமகோடி நியமனம் செய்யப்பட்டார்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் மே 2-ல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்தது. அனுமதி வழங்க, சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்தது. இதையடுத்து மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழக அரசு இன்று வழங்கியுள்ளது.