எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்) https://x.com/EPSTamilNadu
தமிழ்நாடு

ஆண்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து சேவை: தேர்தல் வாக்குறுதி அறிவித்த இபிஎஸ் | AIADMK |

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும்...

கிழக்கு நியூஸ்

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆண்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து சேவை செயல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றைப் பட்டியலிட்டார். அதன்படி,

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்

  • குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ. 2,000 வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.

  • நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நகர பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

  • அம்மா இல்லம் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் குடியிருக்கச் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல் நகரப் பகுதிகளில் வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி, விலையில்லாமல் வழங்கப்படும். பட்டியலின மக்கள் குடும்பங்களில் பெண்களுக்குத் திருமணம் நடந்து தனிக் குடுத்தனம் செல்லும்போது அவர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

  • 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 ஆக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப் புறங்களில் வளர்ச்சிக்காக இந்தத் திட்டம் 150 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

  • அம்மா இருசக்கர வாகனம் திட்டம் மூலம் 5 லட்சம் மகளிருக்கு ரூ. 25,000 மானியத்துடன் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

  • தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மண்டலவாரியாக பலதரப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களது கோரிக்கை மனுக்களைப் பெற்றுள்ளது. இப்பணி நிறைவடைந்ததும் அதிமுக சார்பாக குழு தயாரித்த அறிக்கை அறிவிப்புகளாக வெளியிடப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நிர்வாகத் திறனற்ற திமுக

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது: “திமுகவுக்கு நிர்வாகத் திறமை இல்லை. எங்களுக்குத் திறமை இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது ரூ. 5.18 லட்சம் கோடிதான் கடன் இருந்தது. அரசுக்கு வரி வருவாய் இல்லாத கொரோனா காலத்தில் கூட, நாங்கள் திறமையாக நிதியைக் கையாண்டு, நிதிச்சுமை குறைவாக இருக்கும் சூழலை உருவாக்கித் தந்திருக்கிறோம். ஆனால் திமுக பொறுப்பேற்ற பின் நிதி மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தி, நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் கடன் குறைக்கப்பட்டு, வருவாய் உயர்த்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக நிபுணர் குழு அமைக்கப்பட்ட பிறகும் கடன் தான் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி முடிகிற தருணத்தில் சுமார் ரூ. 5.55 லட்சம் கோடி கடன் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நிர்வாகத் திறமை இருந்தால் அனைத்தையும் சாதிக்க முடியும். நிர்வாகத் திறன் இல்லாததால் தான் அரசின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விரைவில் இரண்டாம் கட்ட தேர்தல் அறிக்கை முழுமையாக வெளியாகும். அப்போது அதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும். மக்கள் என்னென்ன நினைக்கிறார்களோ அதெல்லாம் எங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும்” என்றார்.

AIADMK General Secretary Edappadi Palaniswami has announced that if the AIADMK alliance wins the 2026 assembly elections, free bus service will be implemented for men as well.