அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில நாள்களாக அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டிற்கான ஆலோசனைகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவரைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அமித் ஷாவைச் சந்தித்தார்.
அதிமுகவில் தொகுதிப் பங்கீடு
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், தொகுதிப் பங்கீடு விவரங்களை வெளியிட்டனர். அதன்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இரவுக்குள் மற்ற கட்சிகளின் நிலவரம் அறிவிப்பு
செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடைபெற்றுள்ளது. பாஜகவுக்கு 27 இடங்களும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்து, தொகுதிப் பங்கீடு நிலவரம் அறிவிக்கப்படும்.
தோல்வி பயத்தில் முதலமைச்சர்
அதிமுக திட்டமிட்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. நாங்களோ, எங்கள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களோ தில்லிக்குச் சென்றால் திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாடிக்கையாக இருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் கூட்டணி இட்டுத்தான் போட்டியிடுகின்றன. அதைப் போலவே எங்கள் கூட்டணியும் அமைக்கப்பட்டு, எங்கள் கருத்துகளைப் பரிமாறுவதற்காகவே தில்லிக்குச் செல்கிறோம். ஆனால் முதலமைச்சர் நாங்கள் தில்லி சென்றாலே தோல்வி பயத்தில் இருக்கிறார்.
விரைவான அறிவிப்பு
எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. 234 தொகுதிகளில் 210 இடங்களில் எங்கள் கூட்டணி அதிக இடங்களை வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். திமுகவில் 20 நாள்களாக பேச்சுவார்த்தை மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் கூட்டணியில் காலையில் பேச்சுவார்த்தைக்கு வந்து, மதியம் பேச்சுவார்த்தை முடிவு செய்யப்பட்டு, மாலையில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுவிட்டது. 20 நாள்களாக திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் வார்த்தைப் போர் நடந்தது. அதைப்பற்றி எந்த ஊடகமும் விவாதம் நடத்தாதது ஏன்?” என்றார்.
In the AIADMK alliance, the BJP has been allotted 27 seats, the Anbumani-led PMK 18 seats, and the AMMK 11 seats.