மு.பெ. சாமிநாதன் மற்றும் பொன்முடி 
தமிழ்நாடு

திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி, சாமிநாதன் நியமனம் | Ponmudy |

கடந்த ஏப்ரல் மாதம் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் பொன்முடி.

கிழக்கு நியூஸ்

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களாக க. பொன்முடி, மு.பெ. சாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்மூலம், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கை 5-ல் இருந்து 7 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், திமுக கட்சி ரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்ட க. பொன்முடி துணைப் பொதுச்செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ச்சியொன்றில் பேசியபோது, சைவம் மற்றும் வைணவத்தை இழிவுபடுத்தி பேசியதாகச் சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழியும், பொன்முடியின் பேச்சுக்கு கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையானதைத் தொடர்ந்து, துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டடார். இந்த அறிவிப்போடு, கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து திருச்சி சிவாவை விடுவித்து புதிய துணைப் பொதுச்செயலாளராக நியமித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதே காரணத்துக்காக அமைச்சரவையிலிருந்தும் பொன்முடி விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் பொன்முடி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சராக உள்ள மு.பெ. சாமிநாதனும் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவில் திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டு வந்தார் மு.பெ. சாமிநாதன்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களாக ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகியோர் உள்ளார்கள். பொன்முடியும், மு.பெ. சாமிநாதனும் இணைக்கப்படுவதன் மூலம், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மு.பெ. சாமிநாதன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இல. பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிந்து வந்த இல. பத்மநாபன் திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக கே. ஈஸ்வரசாமி திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கட்சியின் நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு என இரு மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்படுவதாகவும் திமுக அறிவித்துள்ளது.

வேலூர் தெற்கு மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. இந்த மாவட்டத்துக்கான பொறுப்பாளராக ஏ.பி. நந்தகுமார் எம்எல்ஏ நியமிக்கப்பட்டார்.

வேலூர் வடக்கு மாவட்டத்தில் காட்பாடி, கீழ்வைத்தியணான்குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. இந்த மாவட்டத்துக்கான டி.எம். கதிர்ஆனந்த் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்புகளை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

With the 2026 Tamil Nadu Assembly Elections approaching, the DMK has appointed Saminathan and Ponmudy as Deputy General Secretaries in a bid to strengthen its organisational structure.

Ponmudy | Saminathan | DMK | Deputy General Secretaries |