கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் பரபரப்பு: 12 வயது சிறுவனைக் கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்கள்

கடந்த மாதம் நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை மாநகராட்சிப் பூங்காவில் வைத்து இரண்டு ராட்வைலர் வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பானது

கிழக்கு நியூஸ்

சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுவன் ஜெரால்ட் கடந்த சனிக்கிழமை தன் வீட்டிலிருந்து கிளம்பி பாட்டி வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அதே பகுதியிலிருந்த ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ராட்வைலர் மற்றும் பாக்ஸர் இனத்தைச் சேர்ந்த இரண்டு நாய்கள் கடித்துக் குதற ஆரம்பித்தன.

சம்பவத்தை நேரில் பார்த்த ஜெரால்டின் தந்தை டேனியல் உடனடியாக ஓடி வந்து தன் மகனை அந்த நாய்களிடமிருந்து போராடிக் காப்பாற்றினார். பிறகு ஜெரால்டை கொரட்டூரிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த டேனியல், அருகிலிருந்த காவல் நிலையத்தில் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் ஜான் மீது புகார் அளித்தார்.

டேனியலின் புகாரையடுத்து காவல்துறை அதிகாரிகள், வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் ஜானின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் ஜானின் வளர்ப்பு நாய்கள் ஜெரால்டைக் கடித்தது உறுதி செய்யப்பட்டது, மேலும் உரிமம் பெறாமல் மொத்தம் 5 நாய்களை ஜான் வளர்த்து வருவதைக் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதற்குப் பிறகு ஜான் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு ஜெரால்டின் பெற்றோர் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த மாதம் நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை மாநகராட்சிப் பூங்காவில் வைத்து இரண்டு ராட்வைலர் வளர்ப்பு நாய்கள் கடித்துக்குதறிய செய்தி அப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

அந்த சம்பவத்துக்குப் பிறகு, தனது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்கள் வளர்ப்பதற்குப் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி. அதிலும் குறிப்பாகப் பொதுமக்கள் நாய்கள் வளர்க்கும்போது அதற்குண்டான உரிமத்தைப் பெற வேண்டுமென உத்தரவிட்டிருந்தது மாநகராட்சி நிர்வாகம்.