காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை அனுமதி வழங்கியதை அடுத்து, வரும் 20-ம் தேதி பரந்தூர் போராட்டக் குழுவினர் நேரில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.
சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் நெருக்கடியைக் கையாளும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இதற்கான நிலம் எடுக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகனாபுரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 90 சதவீதம் விவசாய நிலம் என்பதால், இத்திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை போராட்டக் குழுவினருக்கு வழங்கியுள்ளன. இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபரில் நடைபெற்ற தவெக விக்கிரவாண்டி மாநாட்டில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காகப் பரந்தூர் போராட்டக் குழுவினர் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், வரும் ஜன.19 அல்லது 20 ஆகிய ஏதேனும் ஒரு தேதியில், பரந்தூர் போராட்டக் குழுவினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதால், இதற்கான அனுமதியையும், பாதுகாப்பையும் வழங்குமாறு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் கடந்த வாரம் மனுக்களை அளித்தார் தவெக பொருளாளர் வெங்கட்ராமன்.
இதற்கான அனுமதியை தற்போது காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை வழங்கியுள்ளதால், வரும் ஜன.20-ல் பரந்தூர் சென்று போராட்டக் குழுவினரை சந்திக்கிறார் விஜய். இந்த சந்திப்பை நடத்துவதற்கு ஏதுவாக ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதனை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.