ANI
தமிழ்நாடு

மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்: எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு, போதைப்பொருள் மாஃபியா வழக்கு என திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணிகள் நீள்கின்றன.

ராம் அப்பண்ணசாமி

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் இன்று (டிச.30) அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து திமுக அரசைக் கண்டிக்கும் வகையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரும், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,

`அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள ஸ்டாலின் அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்குமுறையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர் சம்மந்தப்பட்டிருப்பது, போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சம்மந்தப்பட்டிருப்பது என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.

அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்?’ என்றார்.