https://www.youtube.com/@NewsJ
தமிழ்நாடு

இரட்டை இலை அதிமுகவின் பிரம்மாஸ்திரம்: ரஜினிகாந்த்

இரட்டை இலை முடக்கப்பட்டதால் வேறு சின்னத்தில் நின்று படுதோல்வியை சந்தித்தார்.

ராம் அப்பண்ணசாமி

இரட்டை இலை அதிமுகவின் பிரம்மாஸ்திரம் என அதிமுக சார்பில் சென்னையில் இன்று (நவ.24) நடைபெற்ற வி.என். ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவில் காணொளி வாயிலாக பேசியுள்ளார் ரஜினிகாந்த். அவர் பேசியவை பின்வருமாறு,

`தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர் வி.என். ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள்.

தற்போது லாயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலக கட்டடம், ஜானகி அம்மையார் சம்பாதித்த பணத்தில் அவரது பெயரில் வாங்கப்பட்ட சொத்தாகும். கட்சிக்காக எம்.ஜி.ஆர். கேட்டபோது அதை எழுதிக்கொடுத்துவிட்டார். அப்படிப்பட்ட வள்ளல் குணம் கொண்டவர்.

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜானகி ராமச்சந்திரன் அரசியலுக்கு வந்தது அரசியல் விபத்து. அரசியலுக்கு வருவதில் அவருக்கு துளியும் ஈடுபாடும் இல்லை, விருப்பமும் இல்லை. சூழ்நிலை காரணமாக சில நபர்களின் வற்புறுத்தலால் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆனார். சில நாட்கள் கழித்து தேர்தல் நடைபெற்றபோது, இரண்டு அணியாகப் பிரிந்து இரட்டை இலை முடக்கப்பட்டது.

இரட்டை இலை அதிமுகவின் பிரம்மாஸ்திரம். அது முடக்கப்பட்டதால் வேறு சின்னத்தில் நின்று படுதோல்வியை சந்தித்தார். 2017-ல் அரசியலுக்கு வருவதாக நான் கூறினேன். நிறைய நபர்கள் எனக்கு ஆலோசனை வழங்கினர். அந்த ஆலோசனைகளை நான் கேட்டிருந்தால் நிம்மதி உள்ளிட்ட அனைத்தையும் இழந்திருப்பேன்.

அதுபோல் ஜானகி அம்மையார் யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அவராகவே முடிவெடுத்து ஜெயலலிதா அம்மையாரை அழைத்து, இந்த அரசியல் எனக்கு சரிபட்டு வராது, அதற்கு நீங்கள்தான் சரியான நபர் என்று கூறி கட்சியை ஒப்படைத்து அரசியலில் இருந்து விலகிவிட்டார்’ என்றார்.