படம்: https://x.com/AIADMKOfficial
தமிழ்நாடு

அதிமுக தனிப்பெரும் கட்சியாக வெல்லும்: எடப்பாடி பழனிசாமி

"எந்தக் கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது."

கிழக்கு நியூஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

"2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும்.

நமக்குப் பலமான கூட்டணி அமையும் கவலைபட வேண்டாம். முதற்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இதில்கூட ஸ்டாலின் பேசுகிறார். பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டீர்களே என சட்டப்பேரவையிலேயே பேசுகிறார். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால், உனக்கு என்னயா கவலை? ஸ்டாலினுக்குப் பயம் வந்துவிட்டது. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துக்கொண்டதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கூட்டணியின் நோக்கம் வாக்குகள் சிதறாமல் நம் வேட்பாளருக்குக் கிடைக்க வேண்டும். திமுக என்ற தீய சக்தி, மக்கள்விரோத அரசு அகற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கூட்டணி வைக்கிறோம்.

ஆனால், பலர் பேசுகிறார்கள். இன்று எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பலர் பேசுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி பாஜகவோடு கூட்டணி வைத்துவிட்டாரே, பாஜக அதிமுகவை கபளீகரம் செய்துவிடும் என்கிறார்கள். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. சுமார் 31 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த கட்சி. எந்தக் கொம்பனாலும் அதிமுகவைக் கபளீகரம் செய்ய முடியாது. இது உணர்வுபூர்வமான கட்சி" என்றார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்பதைத் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.