அமைச்சர் ரகுபதி (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

அதிமுகவில் மிகப் பெரிய பிளவு ஏற்படவுள்ளது: சட்டத் துறை அமைச்சர் ரகுபதி

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் மிகப் பெரிய பிளவு ஏற்படவுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இந்தப் பிளவை பாஜக செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையன் தலைமை வசம், எஸ்.பி. வேலுமணி தலைமை வசம் செல்லலாம் என செய்திகள் வருகின்றன. எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், அந்தப் பதவிக்கு செங்கோட்டையன் வர வேண்டும் என ஜெயக்குமார் கூறியிருப்பதாகச் செய்திகள் பத்திரிகைகளில் வந்துள்ளன. எனவே, அங்கு மிகப் பெரிய பிளவு உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. அதை நாங்கள் செய்ய மாட்டோம், ஆனால், பாஜக செய்யும்" என்றார் அவர்.

சவுக்கு சங்கர் போதைப் பொருள் வைத்திருந்ததாகப் பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக வரும் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளிக்கையில் "காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று உரிய சாட்சியங்களுடன்தான் கைப்பற்றியிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் எங்களுடைய அரசுக்குக் கிடையாது" என்றார் அமைச்சர் ரகுபதி.

போதைப் பொருள் வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். இதுதவிர, சென்னையிலுள்ள இவரது வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.