மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஐ.எஸ். இன்பதுரை, ம. தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 18 பேர் மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளார்கள். இவர்களில் அன்புமணி ராமதாஸ், எம். சண்முகம், என். சந்திரசேகரன், எம். முஹமது அப்துல்லா, பி. வில்சன், வைகோ ஆகியோரது பதவிக் காலம் ஜூலை 24-ல் நிறைவடைகிறது. காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19-ல் தேர்தல் நடைபெறுகிறது.
திமுக மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், காலியாகும் 6 இடங்களில் திமுக சார்பில் 4 பேரும் அதிமுக சார்பில் 2 பேரும் மாநிலங்களவைக்குத் தேர்வாக வாய்ப்புள்ளது.
திமுக சார்பில் பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் ஒப்புக்கொண்டதன்படி திமுக கூட்டணியில் ஓர் இடம் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ஹாசன் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் இரு இடங்களைப் பிடிக்கலாம். பாமக, தேமுதிக, பாஜகவுக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்விகள் இருந்தன. 2024 மக்களவைத் தேர்தலின்போது ஒப்புக்கொண்டதன்படி தேமுதிகவுக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிர்பந்தம் அதிமுகவுக்கு இருந்தது.
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் இரு இடங்களிலும் அதிமுக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். இதுதொடர்புடைய அதிகாரபூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதிமுக சார்பில் ஐ.எஸ். இன்பதுரை, ம. தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். பாமக, பாஜக, தேமுதிகவுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை.
தேமுதிகவுக்கு இடம் ஒதுக்கப்படுவது பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ள அதிமுக, "அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும். 2026-ல் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின்போது அதிமுக, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கும்" என்று தெரிவித்துள்ளது.