திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் 
தமிழ்நாடு

திமுகவில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | Manoj Pandian |

அதிமுகவை அடகு வைத்துவிட்டார்கள், பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக செயல்படுகிறது...

கிழக்கு நியூஸ்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.

அதிமுக சார்பில் 2001-ல் சேரன்மகாதேவி, 2021-ல் ஆலங்குளம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனோஜ் பாண்டியன். 2010 முதல் 2016 அரை அதிமுக சார்பில் மாநிலங்கவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான இவர், கடந்த 2022-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிய அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

“நான் என்னைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டேன். காரணம், இன்று திராவிடக் கொள்கைகளை முழுமையாகப் பாதுகாக்கின்ற தலைவராகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை எங்கேயும் அடகு வைக்காதவராகவும், உரிமைகளுக்காகப் போராடும் தலைவராகவும், எந்தச் சூழ்நிலையிலும் தான் எடுத்திருக்கின்ற முயற்சிகளை எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதைத் தாங்கி அதனைச் சிறப்பாக முடிக்கக்கூடிய தலைவராகவும் நான் பார்த்து, சிந்தித்து எடுத்த ஒரு தீர்க்கமான முடிவுதான் இந்த முடிவு. நான் என்னை இந்த இயக்கத்தில் இணைத்துக்கொண்டதற்கான காரணம், எஞ்சிய வாழ்க்கையிலும் இந்தத் திராவிடக் கொள்கையினைப் பாதுகாக்கக்கூடிய ஒரு இயக்கமாகவும், அதைத் தலைமை ஏற்று வைத்திருக்கக்கூடிய தலைவருடைய சிந்தனைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தொண்டனாகவும் என்னை இணைத்துப் பணியாற்ற இங்கே இன்று நான் வந்திருக்கின்றேன்.

இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதிமுகவைத் தோற்றுவித்த எம்ஜிஆரும், பாதுகாத்து வளர்த்த ஜெயலலிதாவும் எந்த சூழ்நிலையிலும் இயக்கத்தை அடகு வைத்ததில்லை. இப்போதிருக்கும் அதிமுக அவர்கள் காலத்தில் இருந்த கட்சியாக இல்லை. இன்று வேறு ஒரு கட்சியை நம்பி, அவர்களின் சொல்படி நடக்கும் துர்பாக்கியமான சூழல் உள்ளது. மேலும், அதிமுகவை எந்தக் கொள்கைக்காக உருவாக்கினார்களோ, எந்த விதிகளின் அடிப்படையில் உருவாக்கினார்களோ அதைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள். இப்போது பாஜகவின் கிளைக் கழகமாக செயல்படுகிறார்கள். அதனால்தான் திராவிடக் கொள்கையைப் பாதுகாக்கும் திமுகவில் நான் இணைந்திருக்கிறேன்.

நான் இங்கே வந்தபோது என்னைப் புன்முறுவலோடு, மகிழ்ச்சியாக என்னை இந்த இயக்கத்திற்கு வரவேற்றார்கள். நான் ஒன்றை மட்டும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். தொண்டனுடைய உணர்வையும் மக்களுடைய உணர்வையும் எந்தச் சூழ்நிலையிலும் கேட்க மாட்டேன் என்று சொல்லி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கூவத்தூர் பாணியில் கபளீகரம் செய்திருப்பவர்கள் உடன் இருப்பதோடு, அவர்கள் எப்படி அவர்களோடு இருப்பது என்பதை நான் சிந்தித்துதான் இந்தத் திராவிட இயக்கம் திராவிடக் கொள்கைகளை இன்று பாதுகாத்து வலிமையான தமிழகத்தை உருவாக்கக்கூடிய நம்முடைய தலைவர் அவர்களுடைய முன்னிலையில் இன்று நான் என்னை இணைத்துக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எனக்கென்று சில கொள்கைகள் உண்டு. கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய இயக்கத்திற்கு நான் வந்திருக்கின்றேன்.

பாஜகவுடன் எந்தச் சூழ்நிலையிலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு எந்த அடிப்படையில் மீண்டும் கூட்டணி வைத்தார் என்பதற்கு இன்றுவரை பதில் இல்லை. பாரதிய ஜனதா கட்சியினுடன் கூட்டணி வைத்தபோது தொண்டர்கள் உணர்வு கேட்கப்பட்டதா? பொதுக்குழு கூட்டப்பட்டதா? மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு கூட்டணி இல்லை என்று சொன்னவர்கள் மீண்டும் அந்தக் கூட்டத்தைக் கூட்டி அந்த முடிவு எடுக்கப்பட்டதா? இதற்கெல்லாம் விடையில்லை. தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக அண்ணா திமுகா என்ற இயக்கத்தை அடகு வைத்து அங்கே இருப்பவர்களோடு இருப்பதைவிட, திராவிடக் கொள்கையைப் பாதுகாக்கக்கூடிய ஒரு தலைவரோடு இங்கே தொண்டனாகப் பணியாற்ற வந்திருக்கின்றேன்” என்றார்.

Alangulam MLA and Supporter of O. Panneerselvam, Manoj Pandian has joined the DMK.