ANI
தமிழ்நாடு

முதல்வரின் பதிலைக் கண்டு பயமா?: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

"இந்த அரசைக் கண்டு பயப்படும் கட்சி அதிமுக இல்லை."

கிழக்கு நியூஸ்

கொலைப் பட்டியலைக் காண்பது தான் திமுக ஆட்சியின் சாதனையாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"திமுக அரசு அமைந்த பிறகு, ஜீரோ நேரத்தில் முழுமையாகப் பேச எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. தொடர்ந்து இதைத் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதைக் கண்டித்து தான் வெளிநடப்புச் செய்திருக்கிறோம்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. அதற்கு நேற்று நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டேன். ஸ்டாலின் மாடல் அரசாங்கம், ஸ்டாலின் தலைமையில் இருக்கும் காவல் துறை செயலற்று இருக்கும் காரணத்தினால்தான் தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

கொலைப் பட்டியலைக் காண்பது தான் இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது. சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய இடத்தில் உள்ள முதல்வரின் கீழ் இருக்கும் காவல் துறை கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் அவல நிலையைப் பார்க்கிறோம். குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குக் காவல் துறையைக் கண்டால் அச்சம் இல்லை" என்றார் எடப்பாடி பழனிசாமி.

சட்டப்பேரவையிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேறிய போது, தைரியம் இருந்தால் என் பதிலைக் கேட்டுவிட்டுச் செல்லட்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "என்ன பதிலைக் கிழித்துவிட்டார் இவர். வெட்கக்கேடாக உள்ளது. இவ்வளவு கொலைகள் நடந்த பிறகு தனிப்பட்ட முறை தனிப்பட்ட முறை என்று தான் அவர் பதிலளிக்கிறார். வருடம் முழுக்க இதைத் தானே அவர் சொல்கிறார். இதைக் கேட்க நாங்கள் அவையில் அமர்ந்திருக்க வேண்டுமா. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு என்ன பதில் என்று சொல்ல வேண்டும். அதைக் கேட்கிறோம். அதைவிட்டுவிட்டு குற்றவாளிகளை நாங்கள் கைது செய்கிறோம் என எப்போதும் சொல்கிறீர்கள். எல்லா ஆட்சியிலும் தான் இதைச் செய்கிறார்கள். இதை எப்படி தடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அந்தக் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லவில்லை. நாங்கள் பயந்து வெளிவரவில்லை. எங்களைப் பேச அனுமதிக்காத காரணத்தால் வெளிநடப்புச் செய்துள்ளோம். நாட்டில் நிலவும் பிரச்னையை எடுத்துக் கூறினால், இந்த அரசு காலியாகிவிடும். அதனால்தான் பயந்துவிட்டு, என் பேச்சைக் கேட்க முடியவில்லை. எங்களுடையப் பேச்சுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அதனால்தான் வெளியில் வந்தோம். இந்த அரசைக் கண்டு பயப்படும் கட்சி அதிமுக இல்லை" என்றார் எடப்பாடி பழனிசாமி.