தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களைக் கண்டித்து உண்ணாவிரதத்தைத் தொடங்கியது அதிமுக

நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்துள்ளார் பேரவைத் தலைவர் அப்பாவு

ராம் அப்பண்ணசாமி

கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், விஷச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

அதிமுக நடத்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு தன் ஆதரவைத் தெரிவித்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

`இன்றைக்குத் தமிழ்நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டியது ஆளும் அரசின் கடமை. சிறந்த முறையில் மக்களாட்சி நடைபெறுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களாட்சி நடைபெற்றால் ஏன் 63 உயிரிழப்புகள் ஏற்பட்டன’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.

`2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும். மாற்றம் ஒன்றுதான் இன்று மாறாதது. மக்களாட்சி தமிழ்நாட்டில் மீண்டும் மலரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது’ எனத் தன் பேச்சில் நம்பிக்கை தெரிவித்தார் பிரேமலதா.

ஜூன் 26-ல் கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை முன்வைத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார் பேரவைத் தலைவர் அப்பாவு.