கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

திமுகவில் மைத்ரேயன்: எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன? | Edappadi Palaniswami

"ஒவ்வொரு கட்சிக்கும் கட்டுப்பாடு இருக்கிறது. அந்தக் கட்டுப்பாட்டின் அடிப்படையில்..."

கிழக்கு நியூஸ்

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் குறித்த கேள்விக்கு உள்கட்சி விவகாரங்களைப் பற்றி கேட்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கோபித்துக் கொண்டார்.

அதிமுக முன்னாள் எம்.பி.யும் அமைப்புச் செயலாளருமான மைத்ரேயன், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். இதனிடையே, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மைத்ரேயன் நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மைத்ரேயன் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்கு உள்கட்சி விவகாரத்தைப் பற்றி கேட்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கோபித்துக் கொண்டார்.

"உள்கட்சி விவகாரத்தைப் பற்றி கேட்க வேண்டாம். உள்கட்சி விவகாரத்தைப் பகிரங்கமாகப் பேச முடியாது. உள்கட்சி விவகாரத்தைப் பற்றி எங்களுக்கு தான் என்னவென்று தெரியும். அதை வெளிப்படுத்த முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் கட்டுப்பாடு இருக்கிறது. அந்தக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுப்போம். அதை வெளியில் பேசுவது சரியாக இருக்காது.

இது சுதந்திர நாடு, ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தக் கட்சிக்குச் செல்லக் கூடாது, அந்தக் கட்சிக்குச் செல்லக் கூடாது என யாரையும் தடுக்க முடியாது.

அன்வர் ராஜாவைக் கட்சியிலிருந்து நீக்கினோம். மீண்டும் சேர்த்துக் கொண்டோம். அவர் மறுபடியும் சென்றுவிட்டார். அதேபோல, மைத்ரேயன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மறுபடியும் கட்சியில் சேர்த்தோம். ஆனால், மறுபடியும் கட்சியைவிட்டு சென்றுவிட்டார். இப்படிப்பட்டவர்கள் எந்தக் கட்சியிலும் நிலையாக இருக்க மாட்டார்கள்.

கூட்டணி குறித்து பேசிய அவர், "எங்களைப் பொறுத்தவரை எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டுமோ அந்த நேரத்தில் அதைப் பேசுவோம். கூட்டணியைப் பொறுத்தவரை இன்னும் 8 மாதங்கள் உள்ளன. 8 மாத காலத்தில் இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில், பாஜக கூட்டணியில் எங்களுடைய கூட்டணியைத் தலைமையேற்று வந்து சேருவார்கள்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Edappadi Palaniswami | ADMK | AIADMK | Maitreyan | DMK | MK Stalin