கோப்புப்படம் 
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜயுடன் பேசினேனா?: எடப்பாடி பழனிசாமி பதில் | Edappadi Palaniswami | TVK Vijay |

"அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைக்கிறோம்."

கிழக்கு நியூஸ்

தமிழக வெற்றிக் கழகத்தினர் விருப்பப்பட்டு வந்து தங்களுக்கு ஆதரவு கொடுப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, "அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி தான் வெற்றியைப் பெறும் கூட்டணி.

நீங்கள் (ஸ்டாலின்) கூட்டணியை நம்பி இருக்கிறீர்கள். கூட்டணி தேவை தான். ஆனால், அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும்.

அங்கே பாருங்கள் கொடி பறக்கிறது. பிள்ளையார்சுழி போட்டுவிட்டார்கள். எழுச்சி, ஆரவாரம். குமாரபாளையத்தில் நடைபெறும் கூட்டத்தின் ஆரவாரம் உங்களுடைய செவியைத் துளைத்துக் கொண்டு போகப்போகிறது" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

குமாரபாளையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தவெக கொடியுடன் சிலர் கலந்துகொண்டிருந்தார்கள். தவெக கொடியைக் குறிப்பிடும் வகையில் எடப்பாடி பழனிசாமி 'கொடி பறக்கிறது' எனப் பேசியதாகத் தெரிகிறது. இதன்மூலம், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையவுள்ளதற்கான தொடக்கப்புள்ளியாக அவருடைய பேச்சு அமைந்தது.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

நீங்கள் பரப்புரைக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் தவெகவினர் வரவேற்பு கொடுக்கிறார்கள் எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்து அவர் பேசியதாவது:

"தவெகவினர் விருப்பப்பட்டு வந்து ஆதரவு கொடுக்கிறார்கள். தலைமையின் ஆணையைப் பெற்றுவிட்டு வர வேண்டும் என எங்களுடைய மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், அவர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்துகொள்கிறார்கள்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு விமர்சனம் செய்கிறார்கள். அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததிலிருந்து இன்று வரை எங்களைப் பற்றி தான் விமர்சனம் செய்கிறார்கள். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால், இவர்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது?

இவர்கள் திமுக தலைமையில் கூட்டணி அமைத்துள்ளார்கள். திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் எனப் பல கட்சிகள் அங்கு கூட்டணி வைத்துள்ளன. அந்தக் கட்சித் தலைவர்களெல்லாம் எங்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைக்கிறோம். அதில் ஒரு விமர்சனம் வைக்கிறார்கள். அவர்களால் பொறுக்க முடியவில்லை. கூட்டணி இல்லையென்றால், வெற்றி எளிதாக வரும் என நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது" என்றார் எடப்பாடி பழனிசாமி.

தவெகவுடன் கூட்டணியை அமைத்துவிட்டால், கூட்டணியிலிருந்து பாஜகவை அதிமுக கழற்றிவிட்டுவிடும் என டிடிவி தினகரன் கூறியிருப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கையில், "அவர் (டிடிவி தினகரன்) என்னங்க ஒரு கட்சியை நடத்துகிறார்? இதையெல்லாம் ஒரு கேள்வியாகக் கேட்கலாமா? அவர் ஒரு கட்சியா? எங்களுடைய கட்சி 2 கோடி தொண்டர்கள் உள்ள கட்சி. அதற்குத் தகுந்த மாதிரி கேள்விகளைக் கேளுங்கள். யார் யாரோ பேசுவதையெல்லாம் கேள்வியாகக் கேட்க வேண்டாம். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான விமர்சனங்களைச் செய்து வருகிறார். அவர் நினைப்பது நடக்கவில்லை. எனவே, இப்படிப்பட்ட வார்த்தைகளை அவர் கக்கி வருகிறார்" என்றார்.

மேலும் பேசுகையில், "இந்தக் கூட்டணி வருமா? அந்தக் கூட்டணி வருமா? என்பது தேர்தல் வரும்போது தான் தெரியும். எங்களுடைய கூட்டணியில் சேரவிருக்கும் கட்சிகளெல்லாம் சுதந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியிலுள்ள கட்சிகளைப் பொறுத்தவரை, அவர்களால் சுயமாக, சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் வேட்புமனுக்களைக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்கள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாம் செய்திகளில் வருகின்றன. எனவே, அவர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது" என்றார் எடப்பாடி பழனிசாமி.

தவெக தலைவர் விஜயுடன் பேசியதாகச் சொல்லப்படும் தகவல் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

"விஜயுடன் பேசவில்லை. நாங்கள் ஏற்கெனவே மக்களைப் பார்த்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து (கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள்) ஆறுதல் கூறிவிட்டு வந்துவிட்டோம்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Edappadi Palaniswami | EPS | AIADMK | ADMK | TVK | TVK Vijay |