தமிழ்நாடு

அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான்: எடப்பாடி பழனிச்சாமி காட்டம்!

ராம் அப்பண்ணசாமி

அதிமுக பொதுச்செயலாளாரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

`பிரதமர் மோடி 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்து பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். திமுக சார்பில் ஸ்டாலின், ராகுல் காந்தி, அவர்களின் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டனர். ஆனால் அதிமுக சார்பில் நான் ஒருவன்தான் தமிழகம் முழுவதும் எங்கள் வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களின் ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்’ என மத்திய, மாநில ஆளும்கட்சிகளுக்கு தேர்தலில் கிடைத்த நன்மைகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார் பழனிச்சாமி.

`அதிமுக கூட்டணிக்கு பலம் இல்லை, திமுக கூட்டணி பலமாக இருக்கிறது என தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியிட்டன. தேர்தலுக்கு முன்பு எங்களைப் பற்றி அவதூறுப் பிரச்சாரங்கள் தொடர்ந்து வெளிவந்தன. இத்தனைக்கும் இடையில் 2019 தேர்தலை விட அதிமுகவுக்கு இந்த முறை 1% வாக்கு அதிகமாகக் கிடைத்துள்ளது, இதை எங்களுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்’ என அவர் தெரிவித்தார்.

`பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்திருப்பதைப் போல பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. 2014 தேர்தலில் பாஜக கூட்டணி 18.8 % வாக்குகள் பெற்றது, 2024 தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 18.2% வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது போன்ற செய்திகள் பரப்பப்படுகிறது’, எது உண்மை என்பதை நீங்கள் வெளியிட வேண்டும் என செய்தியாளர்களிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், `கோவையில் கடந்த முறை பாஜக பெற்ற வாக்குகளை விட இந்த முறை குறைவான வாக்குகளையே அண்ணாமலை பெற்றிருக்கிறார். அண்ணாமலையின் கனவு பலிக்காத்தால் அவர் எங்களை விமர்சிக்கிறார். அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான்’ என அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

`மேலும் 2019 தேர்தலை விட இந்தத் தேர்தலில் திமுகவுக்கு 6.03% வாக்குகள் குறைந்துள்ளன. ஆனால் ஊடகங்களில் அதிமுகவின் தோல்வி குறித்த செய்திகள் மட்டுமே வெளிவருகின்றன’ எனத் தெரிவித்தார்.

`இப்போது நடந்தது மக்களவைத் தேர்தல். தேர்தலுக்கு ஏற்றபடிதான் வெற்றி தோல்வி அமையும். அப்படிப் பார்த்தால் 1991 தேர்தலில் திமுகவுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தது, 1996 தேர்தலில் அதிமுகவுக்கு நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளுமே அழிந்துபோகவில்லை. அரசியல் என்றால் அப்படித்தான் இருக்கும்’ என்றார் பழனிச்சாமி.

சசிகலா, பன்னீர் செல்வம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, `அது முடிந்துபோன விஷயம், அது குறித்து பேசத்தேவையில்லை. ஆனால் எதிரிகளுடன் சேர்ந்து குழப்பத்தில் ஈடுபட்டு வருகின்றனர்’ எனத் தெரிவித்தார் எடப்பாடி.

எம்ஜியார் ஜெயலலிதா காலம் முதல் இன்று வரை, நாம் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம். தேசிய கட்சிகள் வெற்றி பெரும் வரை எங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர், ஆனால் அதற்குப் பிறகு தமிழ்நாட்டை மறந்துவிடுகின்றனர். இந்த நிலையை மாற்றவே நாங்கள் தனித்துப் போட்டியிட்டோம், எனத் தங்களின் தேர்தல் நிலைபாட்டை விளக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவில் பிளவு ஏதும் இல்லை எனத் தெரிவித்த அவர், மீண்டும் அதிமுக வலுப்பெறும், அடுத்து நடக்கவிருக்கும் 2026 இல் தேர்தலில் பெரும்பான்மையுடன் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையை முடித்துக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.