ANI
தமிழ்நாடு

ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக அதிமுக உறுதியளித்தது உண்மை: தேமுதிக பொருளாளர் சுதீஷ்

அதிமுக அளித்த உத்தரவாதத்தால்தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

ராம் அப்பண்ணசாமி

தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் ஓர் இடம் வழங்குவதாக அதிமுக உறுதியளித்தது முழுக்க முழுக்க உண்மை என்று தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் தகவலளித்துள்ளார்.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், கடந்த பிப்.12 அன்று தேமுதிகவின் 25-வது கொடிநாள் விழாவை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இந்த நிகழ்வின்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதிமுகவுடனான கூட்டணி அமைந்தபோதே ஒரு மாநிலங்களவை இடம் உறுதி செய்யப்பட்டதாக தகவலளித்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்குவதாக உறுதி அளிக்கவில்லை என்று தெரிவித்தார். அதன்பிறகு, கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் தெரிவிப்பதாக பிரேமலதா அறிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியில் தேமுதிக பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் கூறியதாவது,

`மாநிலங்களவை இடம் தருவதாக அதிமுக உறுதி அளித்தது. இது முழுக்க முழுக்க உண்மை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாக சொல்வேன். அதிமுக அளித்த உத்தரவாதத்தால்தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை’ என்றார்.