அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்து அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை அதிமுக தலைமை மேற்கொள்ள வேண்டும் எனப் பேசினார். 10 நாள்களுக்குள் அதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என கெடுவும் விதித்தார். இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக அவருடைய கட்சிப் பதவிகள் அனைத்தையும் பறித்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் பதவிகளும் அடுத்தடுத்து பறிக்கப்பட்டன.
தொடர்ந்து, கடந்த அக்டோபரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்தநாள் மற்றும் 63-வது குருபூஜையின்போது ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிலுள்ள அவருடைய நினைவிடத்தில் செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார். ஆனால், மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்து சென்றார் செங்கோட்டையன். இவர்களுடன் சேர்ந்தே அவர் மரியாதை செலுத்தினார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் சந்தித்தது பெரும் பேசுபொருளானது.
இதைத் தொடர்ந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்துக்கான நோபல் பரிசைக் கொடுக்க வேண்டும், அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது எனப் பல்வேறு விமர்சனங்களை செங்கோட்டையன் முன்வைத்தார். எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையான அதிமுக இல்லை என்று தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினார். அதிமுகவை ஒன்றிணைக்க தன்னை அழைத்தது பாஜகதான் என்று கூறி, இக்கருத்தை பின்னாளில் மாற்றிக் கொண்டார்.
அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 50 ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்த தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியது மனவேதனையைத் தருவதாகப் பேசினார் செங்கோட்டையன்.
இவற்றைத் தொடர்ந்து, விஜய் முன்னிலையில் நவம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணையவுள்ளதாகக் கடந்த இரு நாள்களாகத் தகவல்கள் கசிந்து வந்தன. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தாலும், தவெகவில் இணைவது குறித்த கேள்விகளுக்கு மௌனம் காத்து வருகிறார்.
இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை செங்கோட்டையன் இன்று ராஜினாமா செய்தார். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை அவருடைய அறையில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
சட்டப்பேரவைத் தலைவர் அறையிலிருந்த அமைச்சர் சேகர் பாபுவை செங்கோட்டையன் சிறிது நேரம் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக, அவரைத் திமுகவில் இணைப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாகச் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
KA Sengottaiyan | ADMK | AIADMK | Vijay | TVK | Edappadi Palaniswami | Appavu | Sekar Babu |