தமிழ்நாடு

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

இந்த விவகாரத்தில் முன் ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் விஜயபாஸ்கர் மனுவைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

ராம் அப்பண்ணசாமி

நில மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் கேரளாவில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது மகள் ஷோபனாவுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலிப் பத்திரம் மூலம் அபகரித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மேலக் கரூர் சார்-பதிவாளர் முகமது அப்துல் காதர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக வழக்கறிஞர் மாரப்பன், ரகு, சித்தார்த், செல்வராஜ் உள்ளிட்ட ஏழு நபர்கள் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நில மோசடி வழக்கு மீது விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டு எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவானதும், இந்த விவகாரத்தில் முன் ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் விஜயபாஸ்கர் மனுவைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.

இதனை அடுத்து தலைமறைவானார் விஜயபாஸ்கர். தலைமறைவான விஜயபாஸ்கரை தமிழக சிபிசிஐடி காவல்துறை ஐந்து தனிப்படை அமைத்து கடந்து சில வாரங்களாகத் தேடி வந்தது. இந்நிலையில் கேரளாவில் வைத்து இன்று (ஜூலை 16) கைது செய்யப்பட்டுள்ளார் விஜயபாஸ்கர்.