அன்வர் ராஜா 
தமிழ்நாடு

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா | DMK | Anwar Raajhaa

கொள்கையில் இருந்து தடம்புரண்டு தற்போது பாஜகவின் கையில் அதிமுக சிக்கியிருக்கிறது.

ராம் அப்பண்ணசாமி

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான அன்வர் ராஜா இன்று (ஜூலை 21) திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயதான அன்வர் ராஜா, ஒன்றியப் பெருந்தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர், மாநில அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், வக்ஃபு வாரியத்தின் தலைவர் எனப் பல்வேறு அரசுப் பதவிகளை வகித்துள்ளார்.

அதிமுகவின் பிரபலமான இஸ்லாமிய முகங்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா அக்கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜூலை 21) அவர் திமுகவில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அன்வர் ராஜா பேசியதாவது,

`கருத்தியல் ரீதியாக நாங்கள் எல்லாம் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் அதற்கு பிறகு வந்த தலைவர்கள் தலைமையில் வளர்ந்தவர்கள். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன். அதற்கு புறம்பாக இப்போது அதிமுக இருக்கிறது.

கொள்கையில் இருந்து தடம்புரண்டு தற்போது பாஜகவின் கையில் அதிமுக சிக்கியிருக்கிறது. அமித்ஷா தெளிவாகக் கூறிவிட்டார், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிதான் அதில் பாஜக இடம்பெறும் என்றார். மூன்று முறை அவர் பேட்டியளித்திருக்கிறார், ஒரு இடத்தில்கூட அண்ணன் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று குறிப்பிடவில்லை.

சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமியால் நான்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை சொல்ல முடியவில்லை. அதிமுகவை சீரழிப்பதற்காகத்தான் பாஜக சேர்ந்தது. அதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுடன் சண்டையிடுவதுதான் அவர்களின் நோக்கம். அதை அவர்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் பாஜக என்பது ஒரு எதிர்மறையான சக்தி. அக்கட்சியை கண்டிப்பாக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன், ஆனால் அதை கேட்பதற்கு அவர் தயாராக இல்லை’ என்றார்.

இதற்கிடையே, அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 21) காலை அறிக்கை வெளியிட்டார்.