மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுப்பதாக முதலில் தெரிவித்துவிட்டு, பின்னர் அதை மறுத்துப்பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 11) நடைபெற்றுது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது,
`மாநிலங்களவை எம்.பி. சீட்டு குறித்து அவர் (எடப்பாடி பழனிசாமி) ஏன் அப்படி கூறினார் என்பது எனக்குத் தெரியாது. அதை நீங்கள் அண்ணனிடம்தான் கேட்கவேண்டும். அவர்தான் எழுதி கையெழுத்துப்போட்டுக் கொடுத்தார். நீங்கள் அதையே திருப்பி திருப்பி கேட்பதால், அதை நாங்கள் காண்பிக்கவேண்டிய நிலை வருமோ என்றுகூட நான் யோசிக்கிறேன்.
நாகரீகம் கருதிதான் நாங்கள் இதுவரை அதை காண்பிக்கவில்லை. அரசியல் மாண்பு, மரியாதை கருதி இன்றுவரை அந்த காகிதத்தை உங்களிடம் நாங்கள் காண்பிக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் மிகப்பெரிய அளவில் அரசியலில் நாகரீகத்தை கடைபிடிப்பவர்கள். கேப்டன் எங்களை அப்படித்தான் வழிநடத்தினார்.
அவரது வழிதான் எங்கள் வழி. தேர்தலின்போது அதிமுக அலுவலகத்தில் வைத்து நான் கேட்டேன். இதை இன்றே காட்டிவிட்டு அறிவித்துவிடலாம் என்று அவரிடம் நான் கூறினேன். இன்றைக்குவேண்டாம், தேர்தல் நிறைவடைந்தபிறகு அறிவித்துக்கொள்ளலாம் என்று அவர்தான் கூறினார்.
இங்கு தலைமைக் கழகத்திற்கு அவர் வந்தபோதும்கூட நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டு, தேதிதான் அறிவிக்கவேண்டும் என்றுதான் நான் கூறினேன். அவர்கள் கொடுத்ததால்தான் நான் அப்படிக் கூறினேன். ஆனால் அவரே, நாங்கள் எப்போது கூறினோம், யாரிடம் கூறினோம், யார் யாரோ கூறுவதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்றார்.
அவர் கூறியது கடைகோடித் தொண்டன் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது உண்மைதான், இல்லை என்று மறுக்க முடியாது. அவர் அப்படிக் கூறியபிறகு அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து, அவர் பதற்றத்தில் பேசிவிட்டதாகவும், அதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் விளக்கமளித்தனர்.
அதன்பிறகு அதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. தற்போது அவர்களாகவே 2026-ல் (மாநிலங்களவை எம்.பி. பதவி) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்’ என்றார்.